தேன்கனிக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானை: கிராம மக்கள் அச்சம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை உலா வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் அருகேயுள்ள கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன. அப்போது, அங்குள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், சாமந்தி உள்ளிட்ட தோட்டங்களை நாசம் செய்கின்றன.

இந்நிலையில், கூட்டத்தை விட்டு பிரிந்த ஒற்றை யானை, தினமும் நொகனூர், மரகட்டா, தாவரகரை ஆகிய கிராமங்களில் புகுந்து வாழை, தென்னை மரங்களை தின்று நாசம் செய்து வருகிறது. நேற்று காலை, தல்சூர் கிராமம் அருகே 2 யானைகள் உணவு தேடி சுற்றி திரிந்துள்ளது. இதில் ஒரு யானை, அதிகாலை குடியிருப்பு பகுதியில் உலா வந்துள்ளது. அதை பார்த்த கிராம மக்கள், பட்டாசு வெடித்து அந்த யானையை விரட்டியுள்ளனர். இதையறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சுற்றித்திரிந்த 2 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானை நடமாட்டம் உள்ளதால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேன்கனிக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானை: கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: