தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில், ₹775 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 3 ஆண்டு காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்தின் கீழ், தொப்பூர் கணவாய் மலைப்பகுதி சாலை 6 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. தற்போதுள்ள தொப்பூர் கணவாய் சாலையின் ஏற்ற, இறக்கங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்படும். தர்மபுரி -சேலம் இடதுப்புற சாலை மேம்பாலத்துடன், குறுகிய வளைவுகள் இன்றி விரிவாகத்துடன் 3 வழி சாலையாக போக்குவரத்துக்கு எளிதாக்கப்படும். மேலும், தரைவழி பாலம் மற்றும் சர்வீஸ் சாலைகள் தொப்பூர், மேட்டூர் ஆஞ்சநேயர் கோயில் செல்வதற்கும், யூ வடிவ வளைவிற்கும் கட்டப்பட உள்ளன.
இந்த பணிகளுக்காக தர்மபுரி மாவட்டத்தில் 2.7692 ஹெக்டர் நிலமும், சேலம் மாவட்டத்தில் 1.7711 ஹெக்டர் நிலமும், வனத்துறையின் 13.427 ஹெக்டர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. தற்காலிகமாக விபத்து தடுப்பு நடவடிக்கையாக, இரட்டை பாலத்தின் (தர்மபுரி -சேலம்) இடது புற சாலையை சுமார் 5.50 மீட்டர் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலையின் இடதுபுற இருசக்கர வாகன பாதையினை மேம்படுத்தவும், அகலப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டு, கட்டமேடு பகுதியிலிருந்து இரட்டை பாலம் வரை இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் தனித்தனியே பிரிந்து செல்ல, பொல்லார்ட்ஸ் பொருத்த முடிவு செய்யப்பட்டு, பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்டர் மீடியனில் மண் நிரப்பப்பட்டு உயரப்படுத்தவும், ஆஞ்சநேயர் கோயில் வளைவு மற்றும் தேவையான வளைவுகளில் வாகனங்கள் உடனடியாக நிறுத்துவதற்கேற்ப ரேம்ப் அமைத்திடவும், விபத்து பகுதி என்பதற்கான அறிவிப்பினை கூடுதலான தொலைவிற்கு நீட்டிக்கவும், சாலையின் சில பகுதிகளில் உள்ள சிறிய மேடு பள்ளங்களை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகள் ஏற்படும் நேர்வில், அவசர வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு சாலை விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட மேம்பால சாலை, வனப்பகுதி வழியாக செல்வதால், தற்போது தடையில்லா சான்றை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. அதனால் உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, வனத்துறையின் 34 ஏக்கர் (13.427 ஹெக்டர்) நிலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூரில் கணவாயில் கையப்படுத்தியுள்ளது. இதற்கு பதிலாக, கம்மம்பட்டியில் 34 ஏக்கர் நிலத்தை அரசு வனத்துறைக்கு கொடுத்தது. அந்த நிலத்தை வனமாக மாற்ற, ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் என்ற வீதத்தில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடுவதற்கும், 5 ஆண்டு பராமரிப்பு செலவுக்காக ஒன்றிய அரசு நிதி வழங்கும். தற்போது, உயர்மட்ட மேம்பாலம் சாலை அமைக்கும் இடங்களில் உள்ள 1400 மரங்களை வெட்டி அகற்றும் பணி நடக்கிறது.
இங்கு அகற்றும் மரங்களுக்கு இணையாக கம்மம்பட்டியில் மரக்கன்றுகள் புதியதாக நடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பாலம் வனத்துறையின் 34 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது: சாலை அமைக்க 1,400 மரங்கள் அகற்றம் appeared first on Dinakaran.