ஆற்காடு : ஆற்காட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட 2,777 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,572 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,574 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மைய குடோனில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், குடோன் மூடி சீல் வைத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் 3 மாதத்திற்கு ஒருமுறை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு பார்வையிட்ட பின்னர் மீண்டும் சீல் வைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா முன்னிலையில் நேற்று மேற்கண்ட குடோன் திறக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் மின்னணு வாக்குப்பதிவு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து அந்த மையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதையும் ஆய்வு செய்து விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தேர்தல் தாசில்தார் வசந்தி, ஆற்காடு தாசில்தார் பாக்கியலட்சுமி, நகராட்சி ஆணையர் வெங்கட்ட லட்சுமணன், தேர்தல் துணை தாசில்தார் வீரராகவன், வருவாய் ஆய்வாளர் விசாகரன், விஏஓ வெங்கடேசன், நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குடோனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் appeared first on Dinakaran.