பல நாட்டினரும் வாழ்த்திய வைரமுத்து உலகக்கவியாக மகுடம் சூட்டப்பட்டு விட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற, கவிஞர் வைரமுத்து படைப்பிலக்கியம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கமான வைரமுத்தியம் விழாவில் வைரமுத்தியம் என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, ஜெகத்ரட்சகன் அதைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நமது கவிஞரின் தமிழாற்றுப்படை நூலையும், மகா கவிதை நூலையும் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நிலம் – நீர் – தீ – காற்று – வானம் ஆகிய ஐம்பூதங்களையும் யாராலும் அடக்க முடியாது, ஆனால் ஒரு கவிஞனால், தமிழ்க் கவிதைக்குள் அடக்க முடியும் என்று மெய்ப்பிக்கும் புத்தகம்தான் இந்த மகா கவிதை நூல் என்று அந்த விழாவில் நான் குறிப்பிட்டேன்.

ஒரு தமிழ்க்கவி, உலகக் கவியாக மாறும் உயரம்தான் அந்த நூல். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று அப்போது நான் வேண்டுகோள் வைத்தேன். அது இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது. முனைவர் மறைமலை இலக்குவனார் மொழிபெயர்த்த அந்த நூலை முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டிருக்கிறார். பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வாழ்த்தியதை பார்க்கும்போது உலகக் கவியாக மகுடம் சூட்டப்பட்டுவிட்டார் நம்முடைய வைரமுத்து என்றே சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் படைப்பாளி என்பதால், 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்து, உங்கள் பாடல்கள் எண்ணிக்கை 10,000 ஆகட்டும். படைத்த நூல்களின் எண்ணிக்கை நூறாகட்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post பல நாட்டினரும் வாழ்த்திய வைரமுத்து உலகக்கவியாக மகுடம் சூட்டப்பட்டு விட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: