நெல்லை: மக்களின் கருத்துகளை பிரதிபலிப்பவையாக சமூக வலைதளங்கள் மாறியுள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி வன்முறையை தூண்டும் பதிவுகளை வெளியிடுவது, பகிர்வது போன்றவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் சமூக வலைதள மோகத்தால் பின்தொடர்பவர்களை அதிகரிக்க செய்ய சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவது டிரெண்டாகி உள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், குழுக்களாக பிரிந்து சமூக அடையாளங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோக்கள் வைரலாகும்போது அவர்களுக்கு மோதல் உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பரவும் சர்ச்சை வீடியோக்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நெல்லை எஸ்பி அலுவலகத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அம்பை, தாழையூத்து, சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய காவல் உட்கோட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலா ஒரு போலீசுக்கு சமூக வலைதள கண்காணிப்பு பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை, மற்ற மாவட்டங்களை விட நெல்லையில் அதிகம் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்துவது குறித்து, நெல்லை மாவட்ட சிறுவர்கள், இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
‘‘சட்டப்படி நடவடிக்கை’’
நெல்லை எஸ்பி சிலம்பரசன் கூறுகையில், ‘சாதிய பிரச்னைகள், கொலை வழக்குகள் மீது போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் கடந்த 2 ஆண்டுகளாக குற்றங்கள் வெகுவாக குறைந்து உள்ளது. இச்சூழலில் இளம் தலைமுறையினரின் சமூக வலைதள மோகம், சமீப காலமாக சாதிய உணர்வுகளை வெளிப்படுத்தும் கேடயமாக மாறியுள்ளது. சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மீது தொடர்ந்து வழக்கு பதிந்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக ஊடகப்பிரிவு போலீசார், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வரம்பு மீறும் இளைஞர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
The post சமூக வலைதள மோகத்தில் சிக்கும் இளைஞர்கள்; சர்ச்சை வீடியோக்களை தீவிரமாக கண்காணிக்கும் தனிப்பிரிவு போலீஸ்: நெல்லையில் ஓராண்டில் 36 பேர் கைது appeared first on Dinakaran.