சத்துணவு மைய சமையல் உதவியாளர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: சத்துணவு மையங்களில் உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதியளித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள மொத்த சமையல் உதவியாளர் பணியிடங்களான 8,997 பணியிடங்களை மாதம் ரூ.3000 வீதம் குப்பூதியத்தில் (ஓராண்டு தொகுப்பூதியத்திற்கு பின் சிறப்பு கால முறை ஊதியம்) நிரப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் இந்த பணிகளுக்காக தேர்வு செய்யப்படுவர். அந்தவகையில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சங்கம் நன்றி: சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான 4% இட ஒதுக்கீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி நிரப்பிட அரசாணை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சங்க தலைவர் ரெ.தங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

The post சத்துணவு மைய சமையல் உதவியாளர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: