கொளத்தூர் அருகே சாலையில் மகளுடன் நடந்து சென்ற பெண்ணை முட்டி தூக்கி வீசிய மாடு: பதற வைக்கும் வீடியோ வைரல்


அம்பத்தூர்: கொளத்தூர் அருகே சாலையில் மகளுடன் நடந்து சென்ற பெண்ணை பசுமாடு ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் திரியும் மாடுகள் முட்டுவது, தெரு நாய்கள் கடித்தும் பொதுமக்கள் படுகாயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் மாடுகள் சண்டை போட்டு, வாகனங்களுக்கு குறுக்கே ஓடுவதால், விபத்துகளுக்கு காரணமாகின்றன. இதில், பலர் படுகாயமடைந்துள்ளனர். சில்ர பலியாகியுள்ளனர். மேலும், மாடுகள், நடந்து செல்வோரை முட்டி வீசும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாடு தாக்கி நங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். ஜூன் மாதம் மாடு முட்டி திருவொற்றியூரில் ஒரு பெண் படுகாயமடைந்தார். திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் இறந்தார். இதேபோல், வண்ணாரப்பேட்டையில் மூன்றாவது படிக்கும் பத்து வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியதில் அந்தச் சிறுவனின் இடது பக்கத் தோள்பட்டையில் பலத்த காயமடைந்தான். மேலும் பெண் ஒருவரை எருமை மாடு முட்டித் தள்ளியது. இதேபோல், பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

ஆனாலும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொளத்தூர் பகுதியில் சாலையில் மகளுடன் நடந்து சென்ற பெண்ணை மாடு முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பாலாஜி நகரில் நேற்று ஒரு பெண் தனது மகளுடன், அருகில் உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் கன்றுக் குட்டியுடன் வந்த பசுமாடு ஒன்று, திடீரென தாய் மகள் மீது ஆக்ரோஷமாக பாய்ந்தது. சுதாரித்துக்கொண்ட பெண், தனது மகளை மாடு முட்டாமல் இருக்க பத்திரமாக பிடித்துக்கொண்டார். அப்போது, அந்த மாறு தாயை முட்டி தூக்கி வீசியது. பின்னர் அப்பகுதி மக்கள் மாட்டை விரட்டியடித்து தாய் மகளை மீட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், சாலையில் சுற்றித்திரிந்த பசுவை பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதுபோன்று சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கக்
கூடிய சம்பவம் அதிகரித்து வருகிறது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மகளுடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு முட்டி தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கொளத்தூர் அருகே சாலையில் மகளுடன் நடந்து சென்ற பெண்ணை முட்டி தூக்கி வீசிய மாடு: பதற வைக்கும் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: