தமிழ்நாட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் சிறு, குறு உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் முதியோர் ஓய்வூதிய தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, இறுதிச்சடங்கு நிவாரண தொகை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றன. வேளாண்மையை நம்பியுள்ள நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், சாகுபடிக்காலங்களில் கிடைக்கும் பணிகளை பொறுத்தே அமைகிறது. இயற்கை பேரிடர்களால் பயிர் சாகுபடி பாதிக்கும் போது உழவர்களுடன் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி ரூ.20 ஆயிரத்தில் இலிருந்து ரூ.1 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கான நிதி உதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2,500 ரூபாயில் இந்து ரூ.10,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் விளிம்பு நிலையிலுள்ள நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் குடும்ப நலன் பாதுகாக்கப்படும்.
இந்தியாவில், தமிழ்நாடு முந்திரி உற்பத்தியில் 4வது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதியில் 2வது இடத்தில் உள்ளது. எனவே, முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீட்டில், தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும். இதனால் முந்திரி சாகுபடி செய்யும் உழவர்களும், அதனைச் சார்ந்த தொழில் செய்யும் கிராமப்புற மக்களும் அதிகளவில் பயனடைவார்கள்.
50 உழவர் சந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கூடுதல் கடைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், கடைகள் புனரமைத்தல், தரைதளம் மற்றும் கூரைகள் சீர்படுத்துதல், நடைபாதை வசதிகள் போன்ற பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புகள் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பசுமைக் காய்கறிகளை நுகர்வோர் தங்கள் இல்லத்திலேயே நேரடியாக பெற்றுக்கொள்ள ஏதுவாக, மாவட்டத் தலைமையிடங்களுக்கு அருகிலுள்ள உழவர் சந்தைகள் உள்ளூர் இணைய வர்த்தகத் தளத்துடன் இணைக்கப்படும். முதற்கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள 20 உழவர் சந்தைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
* 100 உழவர்கள் அயல்நாடு சுற்றுலா
நெல் உற்பத்தித்திறனில் அதிக சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை நேரடியாகச் சென்று கண்டுணர்ந்து, அத்தகைய தொழில்நுட்பங்களைத் தங்கள் வயல்களில் செயல்படுத்திடும் விதமாக, 100 முன்னோடி உழவர்கள் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குக் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இதற்கென ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* 15 திட்டக் கூறுகளுக்கு ரூ.142 கோடி நிதி: மன்னுயிர் காப்போம் திட்டம்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பசுந்தாள் உரவிதைகள் விநியோகம், மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த பண்ணையம், வேளாண் காடுகள் உருவாக்குதல், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற 15 திட்டக்கூறுகளுடன் ரூ.142 கோடி நிதி ஒதுக்கீட்டில், 2025-26ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு, தமிழ்நாடு அரசால் சன்ன ரகம் மெட்ரிக் டன் ஒன்றுக்கு 1,300 ரூபாயும் பொது ரகம் நெல் மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.1,050 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கொள்முதல் பருவம் கேஎம்எஸ் 2024-25ல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால், 11.3.2025 வரை, 3 லட்சத்து 24 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, மொத்தம் 24 லட்சத்து 7 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.297 கோடி, நேரடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டில் நெல் ஊக்கத் தொகை வழங்கிட, ரூ.525 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 49 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும் ஏற்படுத்தப்படும். 2025-26ம் ஆண்டில், உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு, ரூ.12 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில்கள், நிழல்வலைக் குடில்கள் அமைத்தல், சூரியசக்தி உலர்த்திகள், சூரியசக்தி பம்பு செட்டுகள் வழங்குதல், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் வழங்குதல் போன்ற உயர் மதிப்புத் திட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களுக்கு அவர்களின் பங்குத்தொகையினால் ஏற்படும் பொருளாதாரச் சுமையினைக் குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள 40 முதல் 50 சதவீத மானியத்திற்குப் பதிலாக 60 முதல் 70 சதவீத மானியம் வழங்கப்படும். இக்கூடுதல் மானியம், மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்காக, 2025 – 26ம் ஆண்டில் 21 கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்க 33 உழவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
வேளாண்மையில் அதிக உற்பத்திக்கும், தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது. சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்க மாநில அளவில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று உழவர்களுக்கு முதல் பரிசாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம், 2025-26ம் ஆண்டிலும் 55 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மேலும், நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து கடைப்பிடிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
The post நல்லூர் வரகு, நத்தம் புளி உள்பட 5 பொருட்களுக்கு: புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.