மாமல்லபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் அறியப்படாத சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், சுற்றுலாத்துறையில் ஈடுப்படும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதிச் சட்டம் ஒன்றினை நமது அரசு கொண்டு வரும். லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்திடும் முக்கிய நகரங்களான மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், குமரி, திருச்செந்தூர், பழனி மற்றும் நாகூர்- வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திடும் நோக்கோடு மொத்தம் ரூ.300 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

முதற்கட்டமாக மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் நகரங்களுக்கென வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கப்படும். மாநிலத்திலுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பொருட்டு, அப்பகுதிகளில் சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதகமண்டலத்தின் மைய பகுதியில் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் ஓர் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா ரூ.70 கோடியில் அமைக்கப்படும். சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்கவித்திடும் பொருட்டு மாமல்லபுரம்- மரக்காணம் வரையிலான கடலோர சுற்றுலா வழித்தடம், திருச்சி – தஞ்சாவூர்- நாகை சோழர்கால சுற்றுலா வழித்தடம், மதுரை – சிவகங்கை மரபுசார் சுற்றுலா வழித்தடம், கோவை – பொள்ளாச்சி வரையிலான இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுற்றுலா வளர்ச்சிக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்த்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாமல்லபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் அறியப்படாத சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: