இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்துடன் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டியது எப்படி? வியக்க வைக்கும் தொழில்நுட்பம், உள்ளூர் பொருட்கள் மூலம் நடந்த பிரமிக்க வைக்கும் கட்டுமான பணி

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்துடன், பாம்பன் கடலில் அதிநவீன வசதிகளுடன் புதிய ரயில் பாலம் ரூ.535 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் திறப்பு விழா காணப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய ரயில் பாலத்தில் இருக்கும் நவீன வசதிகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். கடந்த 19ம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு பிரிட்டிஷ் நிர்வாகம் முடிவு செய்தபோது உதித்தது தான் பாம்பன் ரயில் பால திட்டம். இதையடுத்து மண்டபம் – பாம்பன் இடையே கடலில் 2,065 மீட்டர் நீளத்தில் ரயில் பாலம் கட்டுமான பணிகள் துவங்கின.

கடலுக்குள் 144 தூண்கள் அமைக்கப்பட்டு ரயில் பாலம் 1914ல் கட்டி முடிக்கப்பட்டு பிப்.24ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. மேலும், ரயில்கள் வராத சமயங்களில், கப்பல்கள், மீன்பிடிப்படகுகள் பாலத்தை கடத்து செல்லும் வகையில், பாம்பன் கடல் மட்டத்தில் இருந்து 200 அடி அகலத்தில் ஷெர்ஜர் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டது. இதை 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறக்கி, ஏற்றி வந்தனர். இதுவே இந்தியாவின் முதல் மிக நீளமான கடல் பாலமாக அமைந்தது. மேலும், காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக ராமேஸ்வரம் தீவுப்பகுதி விளங்குகிறது.

இன்னும் சொல்லப்போனால் ஆன்மிக புனித பயணத்தை ராமேஸ்வரத்தில் துவக்கி விட்டுத்தான் காசிக்கே செல்ல வேண்டும் என்கின்றனர் ஆன்மிக பெரியவர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகளவு வந்து செல்லத் தொடங்கினர். ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததாலும், பாம்பன் பழைய பாலத்திற்கு இணையாக புதிய ரயில் பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

* புதிய பாலம்
நூற்றாண்டு கடந்த பழைய ரயில் தூக்குப்பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டது. பக்தர்கள் மண்டபம் வரைதான் ரயிலில் செல்ல முடிந்தது. இதையடுத்து பாம்பன் கடலில் புதிய பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

அதன்படி பழைய ரயில் பாலத்திற்கு அருகே ரூ.535 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டது. 1.3.2019ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பாம்பன் கடலில் இரட்டை வழித்தட மின்சார ரயில் பால பணிகளுக்கு சில மாதங்களில் பூமி பூஜை நடைபெற்று, 2019ல் கட்டுமான பணிகள் தொடங்கின. இந்த பாலம் கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் 2.10 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

* 700 டன் எடையில்…
நாட்டிலேயே முதல் முறையாக பாலத்தின் நடுவே செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 27 மீட்டர், நீளம் 77 மீட்டர். மேலும், அதன் அருகே 2 மாடி கட்டிடத்தில் ஆப்ரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன. கப்பல் கடந்து செல்லும் கால்வாய் பகுதியில் இருபுறமும் 34 மீட்டர் உயரத்தில் 1,470 டன் எடையுள்ள நான்கு இரும்பு தூண்களில் சுமார் 700 டன் எடையில் தூக்குப்பாலம் இணைக்கப்பட்டுள்ளது. இது நான்கு புறமும் உள்ள இரும்பு ரோப்களில் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 இரும்பு ரோப்கள் செங்குத்து தூக்குப்பாலத்தை இயந்திர தொழில்நுட்பத்தில் உயர்த்தி, இறக்க பயன்படுகிறது.

* 5 நிமிடத்திற்குள்…
கடல் மட்டத்தில் இருந்து 27 மீட்டர் உயரம் உடையது. வின்ச் மோட்டார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய தூக்குப்பாலம் 17 மீட்டர் உயரத்தில் மேலே உயர்த்தப்படும். இயந்திரத்தில் இயக்குவதால் ஐந்து நிமிடத்தில் உயர்த்தி இறக்க முடியும். காற்று 100 கி.மீ வேகத்தில் வீசினாலும் தூக்குப்பாலத்தை உயர்த்தி இறக்கலாம். இதில் உள்ள மின்சார ரயில் இயங்கும் மின்வயர் இணைப்புகள் உயர்த்தி இறக்கும்போது தானாக இணைப்பில் இருந்து விலகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய தூக்குப்பாலத்தை விட 5 மீட்டர் உயரமாக கட்டப்பட்டுள்ளதால் சிறிய படகுகள் பாலம் திறக்காமலே எந்த நேரமும் கடந்து செல்லும் வசதி உள்ளது. தூக்குப்பாலத்தின் உச்சிக்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது. இரவில் செங்குத்து தூக்குப்பாலம் ஒளிர முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

* 333 தூண்கள் அமைப்பு
பாம்பன் புதிய ரயில் பாலத்தை கட்டுவதற்கு பொறியாளர்கள் பாலத்தின் மேற்குப் பகுதியில் கட்டுமான பொருட்களை இறக்கி பணிகளை துவங்கினர். அதிக கனம் உடைய சென்ட்ரிங் கம்பிகளை உருளை வடிவில் பின்னி 50 அடி உயரத்திற்கு தயார் செய்தனர். பின்னர் கடலுக்குள் ஆழ்துளையிடுவதற்கு இரும்பு உருளைகள் தயார் செய்து கடலில் பலநூறு டன் எடையுள்ள மேடை அமைத்து, அதன் மேலே சுமார் 60 அடி ஆழத்திற்கு ஆழ்துளையிடும் இயந்திரத்தை கடல் மேல் நிறுத்தினர்.

ராட்சத கிரேன்களை பயன்படுத்தி கனமான இரும்பு உருளைகளை கடலுக்குள் ஊன்றி உருளை வடிவிலான அடித்தள தூண்கள் அமைப்பதற்கு ஆழ்துளையிட்டனர். கடல்நீர் இரும்பு உருளைக்குள் செல்லாமல் இருக்க இரும்பு உருளைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து முழுவதும் வெல்ட் செய்யப்பட்டது.

உருளை வடிவில் கட்டி வைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் கம்பி உருளையை இரும்பு உருளைக்குள் இறக்கி வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கலவைகளால் நிரப்பினர். இந்த கான்கிரீட் கலவைகள் வேகமாக இறுகும் தன்மை கொண்டது. கடலுக்கு உள்ளே சரியாக 123.5 அடி ஆழத்திற்கு கான்கிரீட் அடித்தள தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 333 கான்கிரீட் அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* உள்ளூர் பொருட்களால்…:
கடலில் அமைக்கப்பட்ட தூண்கள் மேலே பொருத்தப்பட்டுள்ள இணைப்பு இரும்பு கர்டர்கள் அனைத்தும் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் தயாரிக்கப்பட்டது. உப்புக் காற்றில் எளிதில் துருப்பிடிக்காத வகையிலும், அதிர்வுகளின்றி தாங்கும் வகையிலும் இரும்பு எஃகு வலுவூட்டப்பட்ட உலோகத்தால், இரும்பு கர்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. புதிய ரயில் பாலத்தின் கான்கிரீட் தூண்களின் மேலே மொத்தம் 99 இணைப்பு இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பழைய பாலத்தின் இரும்பு கர்டர் 10 டன் எடையும், 13 மீட்டர் நீளமும் கொண்டது. ஆனால், புதிய பாலத்தின் இரும்பு கர்டர் 20 மீட்டர் நீளமும், 16 டன் எடையும் கொண்டது. பழைய இரும்பு கர்டரை விட அதிக இரும்பு கனம் கொண்டுள்ளதால் எளிதில் துருப்பிடிப்பது தவிர்க்கப்படும். மேலும் அதிவேக ரயிலை தாங்கும் திறன் உடையது.

கடந்த 2024ம் ஆண்டு பாம்பன் புதிய ரயில் பாலம் பணிகள் நிறைவு பெற்றது. இந்த புதிய ரயில் பாலம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கடலுக்குள் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களும், இந்திய தயாரிப்பு பாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கும், நாட்டுக்கும் அர்ப்பணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 5,772 மெட்ரிக் டன் மூலப்பொருட்கள்
புதிய ரயில் பாலத்தின் இரும்பு கட்டுமான பணிக்கு துருப்பிடிக்காத எஃகு உலோகம் மொத்தம் 5,772 மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட்டுள்ளது. கான்கிரீட் கட்டுமான பணிக்கு சிமென்ட் மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரம் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாலம் உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் பாதுகாக்க ஜிங்க் மெட்டாலைசிங், எபிலெக்ஸ் துத்தநாகம் அடங்கிய பிரைமர், பாலிசிலோக்சேன் உள்ளிட்ட பெயின்ட்கள் இரண்டு முறை அடிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தில் உப்புத்தன்மையால் எளிதில் ஏற்படும் துருப்பிடிப்பு தவிர்க்கப்பட்டு பாலத்தின் உறுதித்தன்மை நிலைத்து நிற்கும்.

* 500 தொழிலாளர்களுடன் ஐந்தரை ஆண்டு உழைப்பு
பாம்பன் புதிய ரயில் பால கட்டுமான பணி கடந்த பிப்ரவரி 2019ம் ஆண்டு துவங்கி, நவம்பர் 2024ம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இரவு, பகலாக பணிகள் நடந்துள்ளது. தூக்குப்பாலத்தின் இயக்கம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க மட்டும் 10க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

* 75கி.மீவேகத்தில் ரயிலை இயக்கலாம்
நூற்றாண்டு கடந்த பழைய ரயில் பாலத்தில் அதிகபட்சமாக 20 கி.மீ வேகம் வரை ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால், புதிய ரயில் பாலம் நவீன தொழில்நுட்பத்தில் வலுவான கட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளதால் 75 கிமீ வேகம் வரை ரயிலை இயக்கலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தை இரண்டு நிமிடத்திலேயே ரயில் கடந்து விடும்.

* தண்டவாளத்திலும் புதுமை
பாம்பன் பழைய ரயில் பாலத்தில் 680 கிலோ எடையுள்ள 13 மீ நீளம் உடைய தண்டவாளத்தில் ரயில் இயக்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய ரயில் பாலத்தில் மின்சார அதிவேக ரயில்களை பாதுகாப்பாக இயக்கவும், அதனால் ஏற்படும் அதிர்வுகளை குறைக்கவும் வலுவான புதிய தண்டவாளங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு தண்டவாளம் 260மீ நீளம் உள்ளது. சுமார் 15 டன் எடை கொண்டது.

பழைய தண்டவாளத்தை விட இருபது மடங்கு அதிக நீளம் உடையது. பழைய ரயில் வழித்தடத்தில் அதிக இணைப்புகள் இருந்ததால் அதிலிருந்து அதிக சத்தம் அதிர்வுகள் இருந்தது. ஆனால், இதில் அதிக இணைப்புகள் இல்லாததால் அதிவேகமாக செல்லும் ரயிலின் சத்தம் மிகக் குறைவாக இருக்கும். ஏற்கனவே ஒரு கிலோ மீட்டருக்கு 76 தண்டவாளங்கள் இணைக்கப்பட்ட நிலையில் தற்போது 4 தண்டவாளங்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்துடன் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டியது எப்படி? வியக்க வைக்கும் தொழில்நுட்பம், உள்ளூர் பொருட்கள் மூலம் நடந்த பிரமிக்க வைக்கும் கட்டுமான பணி appeared first on Dinakaran.

Related Stories: