ஓசூர் மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூரு டைடல் பூங்கா இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும். பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளம். நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் தொழில்நுட்பப் பணியாளர்கள் இங்கு வேலை பார்க்கின்றனர். புதிது புதிதான ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கூடாரமாகவும் பெங்களூரு திகழ்ந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் வேலை பார்க்க ஏதுவான இந்திய நகரங்களுக்கான பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கு ஐடி பணியாளர்களுக்கு தேவையான சிறப்பான அலுவலக சூழல், ஊதியம், சலுகைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெங்களூரு தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த மேலாண்மை பிரிவில் பணியாற்றுபவர்கள் கூட இதை உறுதி செய்துள்ளனர். ஐடி பணியாளர்களுக்கு உகந்த நகரங்களுக்கான பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், ஓசூரில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளதற்கு தொழில்துறையினர் வரவேற்று உள்ளனர்.
ஓஸ்டியா (ஓசூர் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்) சங்கத் தலைவர் மூர்த்தி கூறியதாவது: ஓசூரில் ₹400 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளதை ஓசூர் தொழில் துறையினர் வரவேற்கிறோம். அவருக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். ஓசூரை ஒட்டி அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் மிக விரைவில் மிகப் பெரிய வளர்ச்சி பெறும். இந்த நிதி நிலை அறிக்கையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ₹2.5 லட்சம் கோடி கடன் வழங்குதல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக தொழில் பயிற்சி நிலையங்கள் அமைத்தல், தமிழகத்தில் 9 இடங்களில் 398 ஏக்கரில் ₹366 கோடியில் புதிய தொழிற்பேட்டைகளை அமைத்தல், ₹225 கோடி ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டம் ஆகியவை தமிழகத்தை தொழில்துறையில் முன்னணி மாநிலமாக உருவாக்கும். தமிழக முதல்வரின் ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த இந்த அறிவிப்புகள் பெரிய அளவில் பயன்தரும்.
ஓசூர் எஸ்.எஸ். பைன் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் சத்யா: பெங்களூருவில் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ்., எச்.சி.எல் போன்று 500 க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் பெங்களூருவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும் பெங்களூரு முழுவதும் ஐடி நிறுவனங்கள் நிரம்பி வழிந்து வருகிறது. மைசூரை நோக்கி செல்வதை ஓசூருக்கு கொண்டு வரவேண்டும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஓசூரில் விமான நிலையம், மெட்ரோ ரயில், ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதி அமைச்சருக்கும் நன்றி.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்க செயற்குழு உறுப்பினர் வெற்றி ஞானசேகரன்: ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக கட்டமைப்பு வசதிகளோடு ₹400 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் (தகவல் தொழில்நுட்ப பூங்கா) அமைக்கப்படும் என அறிவித்ததை, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பில் வரவேற்கிறோம். உலகளாவிய திறன் மையங்கள் சென்னை, கோவைக்கு அடுத்து தொழில் வளர்ச்சியில் பெரும் வெற்றி கண்டு வரும் ஓசூரில் உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களின் புதிய மையமாக நிலை நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓசூர் மாநகரில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளுடன், அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். உலகின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய உலக அளவிலான திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களை இங்கு அமைத்திட தேவையான அனைத்து வசதிகளும் இந்த வழித்தடத்தில் அமைத்து, செயற்கை நுண்ணறிவு துறைக்கு முக்கிய வழித்தடமாக இது அமையும்.
ஐஎன்டியுசி தேசிய செயலாளர் மனோகரன்: தமிழக அரசு தற்போது எடுத்துள்ள முடிவு, சேவைத்துறைக்கு மிகப்பெரிய மைல்கல். ஓசூரில் பொருள் உற்பத்தி மட்டுமின்றி மென்பொருள் சேவைக்கும், அதன் ஆராய்ச்சி மேம்பாடு ஆகியவற்றால் மிகப் பெரிய அளவில் அன்னிய முதலீடு தமிழகத்திற்கு கொண்டு வரமுடியும். மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வானம் பார்த்த வறண்ட மாவட்டம், கந்தக பூமி, வெயில் தாக்கும் மாவட்டம் என விருதுநகரை குறிப்பிடுவார்கள். ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளை தவிர மாவட்டத்தில் விவசாயம் பொய்த்து போன நிலையில் உள்ளது. இதனால்தான் இங்கு பட்டாசு தொழில் தீவிரமடைந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. இதனை நம்பி நேரடியாக ஒரு லட்சம் பேர், மறைமுகமாக ஒரு லட்சம் பேர் என 2 லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தொழிலை நம்பியிருக்கின்றனர். அவ்வப்போது ஏற்படும் வெடிவிபத்துகளால் ஆண்டுக்கு சுமார் 100 பேர் வரை உயிரிழந்தாலும், ஆண்டுக்கு தீபாவளி நேரங்களில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரையும், மற்ற காலங்களை கணக்கிட்டால் ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை வருமானமுள்ள தொழிலாக பட்டாசு தொழில் விளங்குகிறது. ஆனாலும், ஒன்றிய அரசின் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் வெடி விபத்துக்களால் பட்டாசு தொழிலம் சிக்கலை எதிர்கொண்டு சிதைந்து வருகிறது.
பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் மக்களுக்கும் தொடர்ச்சியாக வேலை கிடைக்காமல் சிரமத்தில் உள்ளனர். பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக, 100க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் இங்கு சிறப்பாக செயல்பட்டு வந்தன. அதுவும் கடந்த சில மாதங்களாக சீன லைட்டர்களின் வரவால் முடங்கி விட்டது. இதையடுத்து அச்சுத்தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். எங்கும் டிஜிட்டல் ஆகி விட்ட நிலையில், அச்சுத்தொழிலும் சில ரெகுலர் ஆர்டர்களை நம்பியே உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கு என்று தொழிற்சாலைகளை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்தது.
இதற்கு வாய்ப்பாக விருதுநகர் – சாத்தூர் இடையே இ.குமாரலிங்கபுரத்தில் 1,052 ஏக்கரில் ரூ.2 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஒன்றிய அரசின் பாராமுகத்தால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுகிறது. விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு இடம்பெயர்வதை தவிர்க்கும் வகையில் மதுரை மாட்டுத்தாவணியில் 10 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.280 கோடியில் ஐ.டி. பார்க் திட்டத்தை 2022ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி தென்மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் சுமார் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பட்டாசு, அச்சுத்தொழிலை மட்டுமே நம்பியிருந்தவர்கள், தற்போது தங்களது மாவட்டத்திலேயே வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
The post முன்னணி தொழிற்சாலைகள் 2000 ஏக்கரில் விமான நிலையம்; ரூ.400 கோடியில் டைடல் பார்க் ; பெங்களூருக்கு போட்டியாக வளரும் ஓசூர்: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் நன்றி appeared first on Dinakaran.