வேலூர், மார்ச் 8: வேலூர், காட்பாடியில் நடந்த இருவேறு விபத்தில் மின்வாரிய பெண் ஊழியர், எலக்ட்ரீசியன் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி அடுத்த லத்தேரியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சுந்தரராமன்(32). எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சுந்தரராமன் நேற்று மாலை பணி முடிந்து தனது பைக்கில் கருகம்பத்தூர் பாலாறு வழியாக லத்தேரிக்கு சென்று கொண்டிருந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவ்வழியாக ஏற்கனவே ரெடிமிக்ஸ் கலவை ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து சிமென்ட் கலவையுடன் ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறி கிடந்ததாக தெரிகிறது. இந்த ஜல்லிக்கற்களில் சுந்தரராமன் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி பைக்குடன் சாலையில் விழுந்தார். அப்போது அவரது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் ஹெல்மெட்டுடன் அவரது தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல் காட்பாடி அடுத்த கல்புதூரைச் சேர்ந்தவர் அருள்ஜோதி(30), மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மொபட்டில் கல்புதூரில் இருந்து காட்பாடிக்கு சென்றுள்ளார். அப்போது வண்டறந்தாங்கல் கூட்ரோடு கடந்து செல்லும்போது, சாலைவிரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டு நிரப்பி வைத்திருந்த ஜல்லிக்கற்கள் சறுக்கியுள்ளது. அப்போது பின்னால் வந்த லாரி அருள்ஜோதி மீது மோதி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின்வாரிய பெண் ஊழியர், எலக்ட்ரீசியன் உடல் நசுங்கி பலி போலீசார் விசாரணை வேலூர், காட்பாடியில் இருவேறு விபத்து appeared first on Dinakaran.