தந்தை உயிரிழந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவன் வேலூரில் சோகம்

வேலூர், மார்ச் 14: தந்தை உயிரிழந்த சோகத்திலும், அவரது கனவை நனவாக்க பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவனின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வேலூர் மக்கானை சேர்ந்தவர் சிவனேசன். மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துப்புரவு தொழிலாளி சிவனேசன் மாரடைப்பால் இறந்தார். சோகத்தில் இருந்த குடும்பத்தினர் வீட்டில் சிவனேசனுக்கான இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில், சிவனேசனின் மகன் விஷ்ணு, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 (வணிகவியல் பிரிவு) பயின்று வருகிறார். பிளஸ் 2 தேர்வில் நேற்று வணிகவியல் பிரிவில் பொருளியில் பாடத்துக்கான தேர்வு நடந்தது.

இந்த தேர்வை எழுத வேண்டிய நிலையில், தந்தையை இழந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும், தனது தந்தை சிவனேசன் அடிக்கடி கூறும்போது ‘படிப்பே உனது எதிர்காலம்’ என்பதை நினைவில் கொண்டு நேற்று காலை தந்தை இறந்த சோகத்தால் தனது கண்ணில் திரண்ட கண்ணீரை துடைத்தபடி தேர்வு எழுத முடிவு செய்தார். அதன்படி, நேற்று காலை தனது பள்ளி தேர்வு மையத்துக்கு விஷ்ணு தேர்வு எழுதி விட்டு சென்றார். இதையறிந்த பள்ளி ஆசிரியர்களும், சக மாணவர்களும் மிகுந்த சோகத்திற்கு ஆளானார்கள். தந்தை இறந்த சில மணி நேரங்களிலேயே, தனது எதிர்காலத்திற்காக விஷ்ணு தேர்வு மையத்திற்கு வந்ததைக் கண்ட அவர்களும் சோகத்தில் மூழ்கினர். தேர்வு முடிந்தவுடன் தந்தைக்கான இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள மாணவன் விஷ்ணு வீட்டுக்கு விரைந்தார். மாணவனின் இந்த மன உறுதி மற்றும் கல்வியின் மீது அவர் கொண்டுள்ள அக்கறை குறித்து சமூக வலைதளங்களில் ஆறுதலுடன் கூடிய பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories: