வேலூர் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி என தெரிந்தது ‘15 சைனடு வாயு நிரப்பிய குப்பிகளை வைத்துள்ளோம்’

வேலூர், மார்ச் 12: வேலூர் சத்துவாச்சசாரியில் உள்ள கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், உடனே வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது புரளி என தெரியவந்தது. வேலூர் சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைந்துள்ளது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம், மகளிர் விரைவு நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம், நுகர்வோர் குறைவு தீர்வு மையம் உட்பட பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்ற வளாகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் வருகின்றனர். இந்த கோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு இ-மெயிலில் நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் பகல் 1.10 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும். கோர்ட்டில் 15 சைனடு வாயு நிரப்பிய குப்பிகளை வைத்துள்ளோம் என தமிழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட காவல்துறைக்கு கோர்ட் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து கோர்ட் முழுவதும் வெடிகுண்டு உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை 2 மணி நேரம் நடந்தது. வெடிகுண்டு எதுவும் சிக்காததால் அது புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: