போச்சம்பள்ளி : போச்சம்பள்ளியில், முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் பெனுகொண்டாபுரம் ஏரியை சீரமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும். இதனால் பறவைகள் மற்றும் மீன்வளம் அதிகரிக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பெங்களூர்-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், மத்தூரில் இருந்து சுமார் 1 கிமீ. தொலைவில் பெனுகொண்டாபுரம் ஏரி, சுமார் 504.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டிய நெடுங்கல் அணையில் இருந்து, பாரூர் ஏரிக்கு திறந்து விடப்படும் நீர், ஏரியின் பாசன வாய்க்கால் வழியாக பெனுகொண்டாபுரம் ஏரியை வந்தடைகிறது.
இந்த ஏரியின் மூலம் ஒட்டப்பட்டி, மாதம்பதி, கொடமாண்டப்பட்டி, அந்தேரிப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சிகளில் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடல் போல் பரந்து விரிந்து காணப்படும் ஏரி, மழை காலங்களில் முழுமையாக நிரம்பி, கடல் போல் அலைகள் எழுந்தாடுவது கண்கொள்ளா காட்சியாகும். இந்த ஏரியை சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பசும் புல்வெளிகள், மரங்கள் செழித்து காணப்படுகிறது. மேலும், மீனவர்கள் படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.
இந்த ஏரி நிரம்பும் போது, பாசனத்திற்காக உபரிநீர் திறக்கப்படும் போது, பாய்ந்தோடும் தண்ணீரை காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் குவிகின்றனர். இந்த ஏரிக்கு நீர்க்கோழி, மீன்கொத்தி, பச்சை கிளி, நாரை, கொக்கு, புறா உள்ளிட்ட பறவை இனங்கள் ஏராளமாக வருகின்றன.
சீசன் நேரங்களில் வெளிநாட்டு பறவைகளும் வலசை வந்து செல்கிறது. இதனால் இப்பகுதியில் எந்த நேரமும் பறவைகளின் சத்தம் ரீங்காரமாக ஒலித்து கொண்டே இருக்கும். விடுமுறை நாட்களில் கல்லூரி மாணவர்கள், சுற்றுலா செல்வோர் என ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
ஆனால், இந்த ஏரி தற்போது முட்புதர்கள் மண்டி பொலிவிழந்து காணப்படுகிறது. பெனுகொண்டாபுரம் ஏரியை சுற்றுலாத் தலமாக அறிவித்து, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அனைத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
ஏரி பாசன வசதி சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், ‘பெனுகொண்டாபுரம் ஏரியின் கொள்ளளவான 21 அடியில், 140 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த ஏரியின் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறுகிறது. எனவே, ஏரியை சுற்றுலா தலமாக அறிவித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்,’ என்றார்.
இது குறித்து ஒட்டப்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் விஜயகுமார் கூறுகையில், ‘இந்த ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். சுற்றுலா தலமாக்கி படகு இல்லம், சிறுவர் பூங்கா அமைத்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெனுகொண்டாபுரம் ஏரி சிறந்த இயற்கை சுற்றுலாத் தலமாக மாறுவதுடன் அரசுக்கு வருவாயும் கிடைக்கும். மத்தூரில் இருந்து சாமல்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதால், எப்போதும் போக்குவரத்து காணப்படுவதால், பெனுகொண்டாபுரம் ஏரியை சுற்றுலா தலமாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
விவசாயி முனியப்பன் என்பவர் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி கேஆர்பி அணையை அடுத்து 240 கி.மீ. தொலைவில் சாத்தானூர் அணை உள்ளது. பெங்களூரூ வழியாக பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, மேல்மருவத்தூர் செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்கள், சாத்தனூர் அணைக்கு சென்று ரசித்து ஓய்வெடுத்து செல்கின்றனர். இதனை முன்மாதிரியாக கொண்டு, மத்தூரில் இருந்து 1 கி.மீ. தூரம் அமைந்துள்ள பெனுகொண்டாபுரம் ஏரியை சுற்றுலா தலமாக அறிவித்து படகு, சிறுவர் பூங்கா அமைத்தால், இவ்வழியாக பல மைல் தூரம் செல்வோர் இங்கு ஓய்வு எடுத்து செல்வார்கள்,’ என்றார்.
The post முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது பெனுகொண்டாபுரம் ஏரியை சுற்றுலா தலமாக்க எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.
