பழைய ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்புகளை நாளை அறிவிக்க உள்ளார் முதல்வர்: ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் பேட்டி

 

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் (ஜாக்டோ ஜியோ அமைப்பு) தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பேச்சு வார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ சார்பிலும் அரசு ஊழியர்கள் சார்பிலும் 10க்கும் மேற்பட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்நிலையில், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. ஆனால், அதற்கான முடிவுகள் எடுப்பதில் அரசு காலதாமதம் செய்து வருகிறது.

இந்தநிலையில சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் பேட்டி அளித்தனர்.

அந்த பேட்டியில் 10 அம்ச கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்திருந்தோம். பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளோம். இன்றைய பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கை ஏற்கப்படுவதாகவும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அமைச்சர்கள் கூறினார்கள்.

கூடுதலாக 23 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னையை தீர்வு காணும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்புகளை நாளை அறிவிக்க உள்ளார். நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்று போட்டா ஜியோ நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.

Related Stories: