ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காளைகளுக்கு மருத்துவ சான்றிதழ் தரும் பணி தொடக்கம்!

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் காளைகளுக்கு மருத்துவ சான்றிதழ் தரும் பணி தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கால்நடை மருத்துவமனைக்கு நேரடியாக காளைகளை அழைத்து வந்து உரிமையாளர்கள் மருத்துவ சான்றிதழை பெற்று செல்கின்றனர்.

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுவாக, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கென தமிழ்நாடு அரசு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் போட்டி நடைபெற உள்ளதால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில் காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளுடன் சான்றிதழ் பெறக் குவிந்து வருகின்றனர்.

அதே போல், மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. ஜனவரி .15ல் அவனியாபுரத்தில், 16ம் தேதி பாலமேட்டில், 17ம் தேதி அலங்காநல்லூரில் ஐல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. கால்நடை மருத்துவமனைக்கு நேரடியாக காளைகளை அழைத்து வந்து உரிமையாளர்கள் மருத்துவ சான்றிதழை பெற்று செல்கின்றனர்.

மருத்துவப் பரிசோதனையின்போது கால்நடை மருத்துவர்கள் காளையின் உடல் தகுதியைத் தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். காளையின் பற்களைக் கொண்டு அதன் வயது கணக்கிடப்படுகிறது (குறைந்தது 2.5 வயது இருக்க வேண்டும்). மேலும், காளையின் திமில் அளவு, உயரம் (130 செ.மீ-க்கு மேல்) போன்றவை சோதிக்கப்படுகின்றன. மிக முக்கியமாக, காளைகளுக்குத் தொற்று நோய்கள் ஏதும் இல்லை என்பதும் சோதித்த பிறகு மருத்துவ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது காளையின் மருத்துவச் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி விவரங்களைப் பதிவேற்றுவது அவசியமாகும்.

மேலும் போட்டி நடைபெறும் நாளன்று காளைகளுக்கு மது அல்லது இதர போதை மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும்.

Related Stories: