போதைப்பொருள் நெட்வொர்க்கை அழிக்க வேண்டும்.. குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருச்சி : மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் நடைபயணத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை ஆற்றினார். அதில், “வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம்தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி. மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபயணம் சென்று இருக்கிறார் அண்ணன் வைகோ. காலம் தோறும் இளைய தலைமுறை நன்மைக்காகவும் எதிர்காலத்தின் நன்மைக்காகவும் செயலாற்றுவது திராவிட இயக்கம். தள்ளாத வயதிலும் தொண்டு செய்தவர் பெரியார். திராவிட இயக்க பல்கலையில் படித்தவர்தான் வைகோ. கலைஞரின் பக்கத்தில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.

மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு கலைஞர் நடைபயணம் சென்றபோது அவருடன் சென்றவர்தான் வைகோ. 83 வயதிலும் சமூக வளைதளங்கள் மூலம் இளைஞர்களுடன் அரசியல் பேசியவர் கலைஞர். வைகோவின் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும், நிச்சயம் வெற்றி பெறத்தான் போகிறது. தலைவர்கள் மக்களிடம் போய் தங்களது கருத்துகளை கூற நடைபயணம் உதவும். நடைபயணத்தின் நியாயம் குறித்து மக்கள் அப்போதுதான் பேசுவார்கள். முதுமையை முற்றிலுமாக தூக்கி எறிந்து நடைபயணத்தை தொடங்கியுள்ளார் வைகோ. வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும்போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது.

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. போதைப் பொருள் புழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். போதையின் பாதையில் இருந்து மாணவர்களைக் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க மாநில அரசும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன்.

நமது வீட்டு பிள்ளைகள் வழி தவறி போவதை நாம் கண்காணித்து தடுக்க வேண்டும். எல்லாரும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்ப வேண்டும். ஒன்றிய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள்கூட வெறுப்பு பேச்சை பேசுகின்றனர். அண்மையில் நாட்டில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாரும் அச்சத்தில் வாழும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அன்பு செய்ய சொல்லித் தர வேண்டிய ஆன்மிகத்தை சில கும்பல் வம்பு செய்ய சொல்லித் தருகிறது.”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: