2026 தேர்தல் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையேயானது : திருமாவளவன் பேச்சு

திருச்சி : மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் நடைபயணத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை ஆற்றினார். இதே விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “2026 தேர்தல் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையேயானது. சனாதனவாதிகள் ஒரு புறம் இருக்க திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் பேசுவது போல் முகமூடி அணிந்து சிலர் உள்ளனர். சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கவிடாமல் இருக்கவே இந்த கூட்டணி ஒன்றிணைந்துள்ளது.

திராவிடம் தமிழுக்கோ, தமிழர்களுக்கோ, தமிழ் தேசியத்திற்கோ எதிரானது அல்ல. திராவிடத்தால்தான் தமிழ் உயிர்ப்போடு இருக்கிறது. வைகோவின் சமத்துவ நடைபயணத்தை, திராவிட நடைபயணம் என்றும் சொல்லலாம். திராவிடம் என்பது தமிழ் தேசியம், சமூக நீதி, சமத்துவம்தான். பெரியார், அண்ணா, கலைஞர் போராடாமல் இருந்திருந்தால் நாம் இன்று இந்திவாலாக்களாகி இருப்போம்.” இவ்வாறு பேசினார். இந்த விழாவில் பேசிய வைகோ, “தமிழ்நாட்டின் பொற்காலமாக அமைந்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. இது தொடர்ந்தால்தான் தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம். வருகிற 2026 தேர்தல் தி.மு.க கூட்டணியை நிச்சயம் வெற்றிபெற செய்ய வேண்டும்,”என்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசுகையில், “இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களின் மக்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் ஒரு முதலமைச்சர் இருந்தால் எப்படி இருக்கும் என்று கூறுகின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் செய்துவரும் சாதனைகள்தான் அதற்கு காரணம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: