போதைப்பொருள் பயன்பாடு என்பது தனி மனிதரின் ஆரோக்கியத்திற்கும், குடும்ப நலத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது. இத்தடையை உடைத்து, போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட “போதை ஒழியட்டும், வாழ்க்கை பாதை ஒளிரட்டும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” என்ற முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க, போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் நலமுடன் வாழ தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய உயரிய நோக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கிட அரியலூர், தர்மபுரி, ஈரோடு, திருவாரூர், கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை, கிண்டி-கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பாக்கம்-அரசு மனநல காப்பகம் ஆகிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ₹15.81 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post ரூ.15.81 கோடியில் போதை மீட்பு சிகிச்சை மையம்; ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன்காக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கை: அரசு வெளியிட்டது appeared first on Dinakaran.
