இந்நிலையில் கராச்சி நகரில் நேற்று நடந்த 3வது லீக் சுற்று போட்டியில் தென் ஆப்ரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக ரையான் ரிக்கெல்டனும், டோனி டி ஸோர்சியும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் அணியின் ஸ்கோர் 28 ஆக இருந்தபோது டோனி 11 ரன்னில் அவுட்டானார். பின் வந்த கேப்டன் டெம்பா பவுமாவும் ரையானும் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினர். டெம்பா பவுமா 76 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 58 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
அப்போது அணியின் ஸ்கோர் 157. அவருக்கு பின் வந்த ரஸ்ஸி வான்டர் துசெனும் அதிரடியாக ஆடத் துவங்கினார். இதனால் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்த வண்ணம் இருந்தது. அப்போது சதம் விளாசியிருந்த துவக்க வீரர் ரையான் 35.3 ஓவரின்போது 103 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவர் 106 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்சர், 7 பவுண்டரிகளுடன் இந்த ஸ்கோரை எடுத்திருந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 201. அடுத்ததாக களமிறங்கிய அய்டன் மார்க்ரமும் தன் பங்குக்கு ரன் மழை பொழிந்தார். 36 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ஒரு சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 52 ரன் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
இடையில் வந்த டேவிட் மில்லர் 14, மார்கோ ஜேன்சன் 0 ரன்னில் அவுட்டாகினர். வியான் முல்டர் அவுட்டாகாமல் 12 ரன் எடுத்தார். 50 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது. அதன் பின், 316 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. துவக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸாட்ரான் ஆடினர். ஆரம்பம் முதலே ஆப்கன் வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அணியின் ஸ்கோர் 16 ஆக இருந்தபோது முதல் விக்கெட்டாக குர்பாஸ் 10 ரன்னில் நிகிடி பந்தில் மகராஜிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
மற்றொரு துவக்க வீரர் இப்ராகிம் 17 ரன்னில் ரபாடாவிடம் கிளீன் போல்டானார். 3வது விக்கெட்டாக செதிகுல்லா அடல் 16 ரன்னில் ரன் அவுட்டானார். அணியின் ஸ்கோர் 50 ஆக இருந்தபோது 3 விக்கெட் இழந்து ஆப்கானிஸ்தான் தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த அணியின் ரஹமத் ஷா மட்டும் சாமர்த்தியமாக ஆடி 90 ரன் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 43.3 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன் எடுத்திருந்தது. பசல்ஹக் பரூக்கி 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் தென் ஆப்ரிக்கா 107 வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவின் ரபாடா 8.3 ஓவரில் 36 ரன் தந்து 3 விக்கெட் வீழ்த்தினார். தவிர, லுங்கி நிகிடி 2, வியான் முல்டர் 2,மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
The post சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ரன் மழை பொழிந்த ரையான் தென் ஆப்ரிக்கா இமாலய வெற்றி appeared first on Dinakaran.
