கேளம்பாக்கத்தில் வேகமெடுக்கும் புறவழிச்சாலை பணிகள்: மார்ச்சுக்குள் பணிகளை முடிக்க திட்டம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் பகுதியில் புறவழிச்சாலை பணிகளை மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி வரை ஆறுவழிச்சாலையும், சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை நான்கு வழிப்பாதையும் கொண்டதாக பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. தற்போது சென்னை மாதவரத்தில் இருந்து சிறுசேரி மென்பொருள் பூங்கா வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒஎம்ஆர் சாலை எனப்படும் ராஜீவ்காந்தி சாலையில் 80க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள், 20க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 3 மருத்துவக் கல்லூரிகள், 5 பல்கலைக் கழகங்கள், ஏராளமான தனியார் பள்ளிகள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள், அலுவலர்கள், படிக்கும் மாணவர்களுக்காக 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், சிறுசேரி மென்பொருள் பூங்காவில் இருந்து படூர் புறவழிச்சாலையில் இருந்து ஆறு வழிப்பாதை அமைக்க கடந்த 2006ம் ஆண்டு நில எடுப்பு மேற்கொள்ள அறிவிப்பு செய்யப்பட்டு பட்டா நிலங்களில் குடியிருந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டது. ஆனால், சாலை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில், படூரில் இருந்து கேளம்பாக்கம் வரை புறவழிச்சாலைப் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த கேளம்பாக்கத்தில் இருந்து தையூர் செங்கண்மால் வரைந்த இந்த புறவழிச்சாலையை ஓஎம்ஆர் சாலையுடன் இணைக்கும்போது கூடுதல் அகலம் தேவைப்பட்டதால் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்ட சாலைக்கான இடத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து அந்த இடங்களில் குடியிருந்தவர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு அனைத்து கட்டிடங்கள், கடைகள் இடிக்கும் பணி முடிவடைந்து தற்போது சாலை அமைக்கும் பணிகள் அதி வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையின் குறுக்கே இந்த புறவழிச்சாலை செல்கிறது. இதனால் அந்த பகுதியில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக பாலப்பணிகள் முடிவடைந்தன. பின்னர் படூர் வரை அமைக்கப்பட்ட சாலையை பாலத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது பாலத்தில் இருந்து தையூர் செங்கண்மால் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலைக்கு கூடுதல் நிலம் தேவைப்பட்டதால் உருவான சிக்கல்கள் களையப்பட்டு தேவைப்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது இந்த புதிய புறவழிச்சாலைப் பணிகள் இரவு, பகல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* படூரில் இருந்து கேளம்பாக்கம் வழியாக தையூர் வரை உள்ள புறவழிச்சாலை 4.67 கிமீ தூரம் கொண்டதாகும். அதேபோன்று காலவாக்கத்தில் இருந்து திருப்போரூர் வழியாக ஆலத்தூர் வரை மற்றொரு புறவழிச்சாலை 7.45 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து போக்குவரத்துக்கு தற்காலிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த இரண்டு புறவழிச்சாலைகளுக்கும் சேர்த்து முதற்கட்டமாக 465 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக 222 கோடி ரூபாயும், சாலை அமைக்கும் பணிகளுக்கு 243 கோடி ரூபாயும் செலவாகி உள்ளது. தற்போது கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளதால் செலவுத்தொகை அதிகரிக்கும் என தெரிகிறது.

* படூரில் இருந்து கேளம்பாக்கம் வழியாக தையூர் வரை அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையின் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். கனரக வாகனங்கள், கல்லூரி பேருந்துகள், புதுச்சேரி மற்றும் கடலூர் செல்லும் பேருந்துகள் இனி கேளம்பாக்கம், படூர், திருப்போரூர் போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிக்குள் செல்ல வேண்டியதில்லை.

The post கேளம்பாக்கத்தில் வேகமெடுக்கும் புறவழிச்சாலை பணிகள்: மார்ச்சுக்குள் பணிகளை முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: