தைப்பூசத்தை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்

குன்றத்தூர்: தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகன் கோயில்களில் தைப்பூச விழா பக்தர்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான், உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றானதும், தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானால் பாடல்பெற்ற தலமான குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர், முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ‘அரோகரா’ முழுக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள், தங்களது உடலில் அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், நீண்ட தொலைவில் இருந்து பாதயாத்திரையாக வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பக்தர்களின் வசதிக்காக இன்று இரவு 11 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் கன்யா மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதா, கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் கோயில் ஊழியர்கள், ஊர் மக்கள் ஆகியோர் மேற்கொண்டனர். குன்றத்தூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

The post தைப்பூசத்தை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: