நாராயணசாமி நாயுடு கனவை திமுக அரசு நிறைவேற்றுகிறது: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

அன்னூர்: கோவை எஸ்எஸ் குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சி, வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தில் அவருடைய 100வது பிறந்தநாள் விழா தமிழக அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு நாராயணசாமி நாயுடுவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அளித்த பேட்டியில், நாராயணசாமி நாயுடு இறுதி மூச்சு வரை விவசாயிகளுக்காக குரல் கொடுத்தவர். இந்தியா முழுவதும் விவசாய அமைப்புகள் விரிவடைய பாடுபட்டவர். கலைஞர் 1989ம் ஆண்டு 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றபோது, நாராயணசாமி நாயுடுவின் கோரிக்கையை ஏற்று இலவச மின்சார திட்டம் நிறைவேற்றி தந்தார். அதேபோல 5வது முறையாக கலைஞர் முதல்வராக பதவியேற்றபோது ரூ.7,000 கோடியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்படி பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்காக பாடுபட்ட நாராயணசாமி நாயுடுவின் கோரிக்கைகள், கனவுகளை திமுக அரசு நிறைவேற்றி தந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பகுதி மக்கள், நாராயணசாமி நாயுடுவின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று துடியலூர்- கோவில்பாளையம் இணைப்புச்சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்பதையும், அவர் பிறந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என்றும் அறிவித்து பெருமை சேர்த்துள்ளார் என்றார்.

The post நாராயணசாமி நாயுடு கனவை திமுக அரசு நிறைவேற்றுகிறது: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: