சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 28 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படும். மேலும் சுங்கச்சாவடிகளில் கார், ஜீப், வேன் போன்ற லேசான வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி திண்டிவனம், ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர், நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புத்தூர், பள்ளிக்கொண்டா, பரனூர், பட்டரை பெரும்புதூர், புதுக்கோட்டை வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், விராலிமலை மற்றும் வாணியம்பாடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகள் வரும் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு காரணமாக தினசரி தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் தனியார் வாகன ஓட்டிகள், பேருந்து மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் மீது கூடுதல் பொருளாதாரச் சுமை ஏற்பட உள்ளது. குறிப்பாக சரக்கு வாகனங்களின் சுங்க கட்டணம் உயர்வதால், பொருட்களின் போக்குவரத்து செலவு அதிகரித்து அதன் தாக்கம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் கூடும் என அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு சுங்கக்கட்டண உயர்வு மேலும் பேரிடியாக அமையும்.
