சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது. பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம் போல சீராக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஆயிலின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் மற்றும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புடன் உள்ளன. சில இடங்களில் அச்சத்தில் அதிகளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதால், சில பெட்ரோல் நிலையங்களில் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை, திடீர் தேவையால் ஏற்பட்ட இந்த நிலையை சமாளிக்க பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னுரிமையுடன் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, எரிபொருள் கிடைப்பதை வழக்கமான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அச்சத்தில் அதிகமாக வாங்குதல் அல்லது தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன மற்றும் விநியோகச் சங்கிலி சீராக செயல்பட்டு வருகிறது.
மேலும், பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் அல்லது அனுமதி பெறாத பாத்திரங்களில் பெட்ரோலை சேமித்து வைப்பது போன்ற பாதுகாப்பற்ற செயல்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் எரிபொருள் தடையில்லா கிடைப்பையும் உறுதி செய்வதில் இந்திய ஆயில் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.
இதுகுறித்து, தமிழ்நாட்டில் எண்ணெய் தொழில்துறைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை பெட்ரோலிய முனையங்களிலும் போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. எனவே தொடர்ந்து தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
