பாமக கட்சி, சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாமக கட்சி, சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக நிறுவனர் ராமதாஸ் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் சின்னம், பெயர், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரியும், தன்னை கட்சியின் தலைவர் என்று அறிவிக்க கோரியும் நிறுவனர் ராமதாஸ் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு, இந்த மனுவுக்கு அன்புமணி பதில் தருமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இரு தரப்பும் மார்ச் 13ம் தேதி வாதிட வேண்டும் என்று உத்தரவிட்ட உரிமையியல் நீதிமன்றம் விசாரணையை தள்ளிவைத்தது. விசாரணையின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தன்னையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் என்று கோரினார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், பாமக கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், கட்சியின் பொதுச்செயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்து விட்டது என்பதால் உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், ராமதாஸ் உள்ளிட்டோர் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: