சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்குவங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று பதவியேற்றார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக ஆளுநராக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி முதல் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி அதிரடியாக மேற்குவங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடந்த 5ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்முவால் நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தின் 27வது பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்ட, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று அதிகாலை 12.15 மணிக்கு கொச்சியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காரில் புறப்பட்டு கிண்டி ராஜ்பவனுக்கு சென்றார். இதையடுத்து தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று மதியம் 12.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, புதிய பொறுப்பு ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது கேரள மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார். பதவியேற்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தலைமை செயலாளர் முருகானந்தம், ஆளுநரின் முதன்மை செயலாளர் கிர்லோஷ்குமார், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய பொறுப்பு ஆளுநருக்கும், அவரது துணைவியார் அனகா அர்லேகருக்கும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதையடுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
முன்னதாக பதவியேற்பு விழா தொடங்கியதும் தேசியகீதமும், அதை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. விழா முடிந்ததும் வந்தே மாதரம் பாடலும், தொடர்ந்து தேசியகீதமும் பாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கோவாவைச் சேர்ந்தவர். அம்மாநில சட்டப்பேரவை தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏற்கனவே இமாச்சலபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றியுள்ளார். ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பாடுகள் நிலவி வந்த சூழலில், ஆர்.என்.ரவியின் இடமாற்றம் மற்றும் புதிய பொறுப்பு ஆளுநரின் நியமனம் அரசியல் ரீதியாக பெரிதும் பேசப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படும் வரை ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இந்த பொறுப்பில் நீடிப்பார்.
இந்நிலையில், ஆர்.என்.ரவி மேற்குவங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டு நிலையில், தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் விடைபெற்றார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து புறப்ட்டு, காலை 9.30 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு தமிழ்நாடு காவல் துறையினர் அவருக்கு அணிவகுப்பு மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர். ஆர்.என்.ரவியுடன் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் காலை 9.50 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி வழியாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா சென்று அங்கு புதிய ஆளுநராக பொறுப்பேற்றார்.
