398 சிலிண்டர்கள் பதுக்கல்: 2 பேர் குண்டாஸில் கைது

 

மதுரை: சிலிண்டர்களை பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை எல்பிஜி சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மதுரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்பி ஸ்ரீனிவாசப் பெருமாள் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியை சேர்ந்த பழனி (46) வீட்டின் அருகே காலியிடத்தில், தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து கோவில்பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் (27), வீட்டருகே சோதனை செய்தபோது அங்கு பதுக்கி வைத்திருந்த 63 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரு இடங்களில் இருந்தும் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அத்யாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பழனி, மதன்குமார் ஆகியோர் கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவின்படி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: