20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி கேளம்பாக்கம் ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைப்பு: ஒன்றிய குழு தலைவருக்கு மக்கள் நன்றி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் சாத்தங்குப்பம் கிராமம் உள்ளது. இங்குள்ள 7வது வார்டில் ஸ்ரீநகர், கனகா பரமேஸ்வரன் நகர், கணபதி நகர், லட்சுமி அவென்யூ, ராஜேஸ்வரி நகர் ஆகிய குடியிருப்புகளில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த குடியிருப்புகளின் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடும். மேலும், சாலைகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு, பாதிப்புக்குள்ளான அப்பகுதி பொதுமக்கள் சார்பில், இச்சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றித்தர வேண்டும் என்றும், சாலைகளின் இரு பக்கங்களிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின்படி, கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.2 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை மேற்கொள்ள ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு இப்பணிகள் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து, கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் 20 ஆண்டுகால பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த ஒன்றிய குழு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்றிய குழு தலைவர் இதயவர்மனை சந்தித்தனர்.

அவருக்கு சால்வையும், ஆளுயர ரோஜா மாலையும் அணிவித்து கலைஞர் சிலையை பரிசளித்து கேக் வெட்டி ஊட்டினர். பின்னர், ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டது. நிகழ்வில் திருப்போரூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், கேளம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி கேளம்பாக்கம் ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைப்பு: ஒன்றிய குழு தலைவருக்கு மக்கள் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: