சென்னை: சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனரான காமகோடி, கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். ஐ.ஐ.டி. இயக்குனரா, ஆர். எஸ்.எஸ். பிரசாரகரா? என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது.
ஏற்கனவே காசி தமிழ் சங்கம் என்ற பெயரில் பா.ஜ. அரசியலுக்கான செயல்பாட்டு களமாக நிறுவனத்தை அனுமதித்தார். இயக்குனரின் வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பிரசாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும். தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமியம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல. கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உடனடியாக இயக்குனர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். மேலும் இவருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்கள் திரும்ப பெறப்பட வேண்டியவை என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, சென்னையில் நடந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வில் பேசும்போது, தனது “தந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் கோமியம் குடித்ததால் குணமானது” என்று கூறியுள்ளார். கோமியத்தின் மருத்துவப் பண்புகள் குறித்து அறிவியல் பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நடைமுறைக்கு தந்திருக்கும் நிலையில், புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக திகழும் சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருக்கும் காமகோடி, பல நூற்றாண்டு காலம் பின்னோக்கி கிடக்கும் அனுபவ தகவலுக்கு, அறிவியல் தரச்சான்று வழங்கி பேசியிருப்பது பொறுப்பற்ற பேச்சாகும். இதனை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
The post சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
