மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்து நடக்க உள்ள நிலையில், காளைகளுக்கு பயிற்சிகளுடன், சிறப்பு உணவுகள் வழங்கி தயாராக வைத்துள்ளனர். தமிழகத்தில் பழங்காலத்தில் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் வீரமகன்களுக்கே பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். தகுந்த வயதடைந்த வாலிபர் துவங்கி, முதியவர் வரை போட்டியில் யாரும் பங்கேற்கலாம். வீறுகொண்ட காளை வாடிவாசலில் கிளம்பியது முதல் சுமார் 50 அடிக்குள் திமிலை பிடித்தபடி விழாமல் சென்றாலே வெற்றிதான்.
வீரர்களிடம் பிடிபடாவிட்டால் காளைக்கு பரிசு. பிடிபட்டால் காளையருக்கு பரிசு என மனிதரையும், மாட்டையும் வீரத்தில் ஒரே தராசு கோட்டில் தமிழ் சமூகம் வைத்து பெருமை கொண்டது. பல நூறாண்டு தொன்மைமிக்க இந்த வீர விளையாட்டு, முதன்முதலாக நான்கு மாடுகளை அவிழ்த்து விட்டே ஆரம்பித்திருக்கிறது.
மதுரை மாவட்டத்தின் அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும், பாலமேட்டில் மாட்டுப்பொங்கல் நாளிலும், மறுநாள் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.
இதில் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் அதிக காளைகள் பங்கெடுக்கின்றன. மாடுபிடி வீரர்களும் குவிகின்றனர். அடுத்த சில நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், களத்தில் நின்று விளையாடி கதி கலக்குவதற்காக, மதுரை மாவட்டத்தில் காளைகளுக்கு பயிற்சிகள் வழங்கி தயாராக வைத்துள்ளனர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டுக்கு நாட்டு மாடுகளில் கிடை மாடுக்குதான் மூர்க்க குணமுண்டு. கன்று பிறந்ததுமே, ஒரு வாரம் பத்து நாளில் முகக்கூறு, கூர்மை, பஞ்சம முகமென ஜல்லிக்கட்டுக்கான மாட்டை கண்டுபிடிப்போம். கூடு கொம்பு, விரிச்ச கொம்பு, பல் என சகலத்தையும் சரிசெய்ய ஆரம்பிப்போம்.
நெற்றியில் தொட்டால் குத்தும். வயிற்றைத் தொட்டாலே உதைக்கும். குறைந்தது 4 வயதுக்கு மேல்தான் வாடிவாசலை காட்டுவோம். அதுவரையிலும் வாடிவாசல் போல கம்பு ஊன்றி, செட்டப் செய்து பயிற்சி தருவோம். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை வண்டி இழுப்பது உள்ளிட்ட வேலைகளுக்கு பயன்படுத்த மாட்டோம். நடை, நீச்சல் பயிற்சி எல்லாம் காளைகளின் கால்களை வலிமையாக்கும். ஜம்ப் அடிப்பது, வலது, இடது கட் அடிப்பதென ஒவ்வொரு காளைக்கும் ஒரு குணமுண்டு. அத்தனையும் தெரிந்து அதற்கேற்ப பயிற்சி தருவோம். காளைகளுடன் பேசிப் ேபசியே பழக்குவோம்.
பழங்காலத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்காகவே மதுரை மாவட்ட கிராமங்களின் தோட்டங்களில் தனி தீவன விளைச்சல் இருந்தது. கடலைக் கொடி, உளுந்தஞ்செடி, பாசிப்பயறு செடி என காளைகளுக்குத் தனியாக தீவனப்பயிர்கள் வளர்க்கப்பட்டது. தற்போது வைக்கோல் போடுகிறோம். பச்சரிசியை ஊறவோ, காயவோ வைத்து தருகிறோம். கம்பை வேகவைத்தும் ஆட்டித்தருகிறோம்.
பருத்தி விதையும் தருவதுண்டு. ஆனால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, சிறிதளவே புண்ணாக்கு தரப்படும். ஏனெனில் இது இளைப்பு ஏற்படுத்தும். தீவனத்துடன், கட்டாயம் குடிக்க குளிர்ந்த தண்ணீர் தருவோம். இத்துடன் தினமும் காளைக்கு வழுவழுப்பு, தெம்பிற்காக கட்டாயம் தேங்காய் சில்லுகளை தின்னக் கொடுப்போம். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது செலவுதான். வருமானமில்லை. ஆனாலும், காளை வளர்ப்பதும், அது ஜெயித்து வருவதும் பெருமையான விஷயம். எங்களில் பலரும் பரம்பரையாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.
‘சாமியாக வழிபடுவோம்’
காளை உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘சகதியில் நிற்க விடாமல், சாணி உடம்பில் ஒட்டாமல் எங்கள் வீட்டு காளைகளை பிள்ளைகள்போல் வளர்த்து வருகிறோம். 4 வயது துவங்கி 20 வயதிற்கும் மேலாக, ஜல்லிக்கட்டில் நன்றாகவே நின்று ஆடுகிறது. 35 வயசுக்குள்ளே ஆயுளை முடித்துக் கொண்டாலும், இந்த காளைகளை புதைத்து வைத்து சாமியாகவே வழிபடுவோம்’’ என்கின்றனர்.
முரட்டு காளையும் பெண்களிடம் சாது…
காளை வளர்ப்போர் கூறுகையில், ‘‘பெண்கள் மிக எளிதாக காளைகளை பராமரிப்பதால், அது அவர்களிடம் சாதுவாக இருக்கும். காளை மீது நம் கை அதிகம் படக்கூடாது. ‘சுனப்பு’ குறைந்து, மூர்க்கமும் குறைந்து விடும். காலையோ, மாலையோ தினம் குறைந்தது நீச்சல் உள்ளிட்ட ஒரு மணிநேர பயிற்சி வழங்குவோம். மண்ணைக்குத்தி விளாசுவதெல்லாம் காளையின் எதார்த்த குணம். அதுவும் கைகொடுக்கும்’’ என்றனர்.
The post ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வொரு குணம் : நெற்றியில் தொட்டால் குத்தும் வயிற்றை தொட்டால் உதைக்கும் appeared first on Dinakaran.