சென்னை: சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் அடுத்தாண்டு நவம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவடையும். இத்திட்டத்திற்கான ஒத்துழைப்பை தமிழக அரசு முறையாக வழங்கி வருகிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல அதிகாரி வீரேந்தர் சம்பியல் கூறினார். சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான புதிய 4 வழித்தட ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இத்திட்டம் 2027ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளன. இத்திட்டம் நிறைவடையும் போது, சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் தற்போதைய 53 மில்லியன் டன்னில் இருந்து 130 மில்லியன் டன்னாக கணிசமாக அதிகரிக்கும்.
இந்நிலையில் இத்திட்டத்திற்கான பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல அதிகாரி வீரேந்தர் சம்பியல் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பால திட்டம் முதலில் 2008ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட போது அதன் மதிப்பீடு ரூ.1,345 கோடியாக இருந்தது. அப்போது திட்டம் ஒற்றை அடுக்காக திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது திட்டத்தில் பல கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது.
புதிய வடிவமைப்பில் இரண்டு நேவி கட்டிடங்கள், மூன்று கேபிள்தாங்கும் பாலங்கள் மற்றும் 13 சாய்வுதளங்கள் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு கேபிள் தாங்கும் பாலம் கட்டுவதற்கான செலவு சாதாரண பாலத்தை விட குறைந்தது ரூ.30 கோடி அதிகமாக இருக்கும் என்பதால் மொத்தத் திட்டச் செலவு 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. மொத்தம் 121 தூண்களில் 111 தூண்கள் தற்போது நடைபெறும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர்களுடன் தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
திட்டத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டமானது தற்போது 20 சதவீதம் மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் திட்டத்தில் முதல்நிலை கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் மேல்நிலை கட்டுமான பணிகள் தொடங்கும். எனவே பருவமழை காலங்களிலும் தொடர்ந்து வேலை நடைபெறும். அடுத்த வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவடையும். மதுரவாயல் வரை உள்ள 8.1 கிலோமீட்டர் நீளப்பணிக்கான டெண்டர்கள் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளது.
அதேபோல் மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஒரே கட்டமைப்பில் இரண்டு தளங்கள் அமைக்கப்படும். மேல்நிலையில் மெட்ரோ ரயிலும், கீழ்நிலையில் உயர்சாலையும் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. தற்போது ரூ.40,000 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
