தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பலர் பயணத்தின் போது தங்களது உடைமைகளை ரயில்களில் தவறவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதேபோல், பல பயணிகளின் செல்போன், பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் திருடு போகிறது. இவ்வாறு ரயிலில் தவறவிடும் மற்றும் திருடுபோகும் உடைமைகள், செல்போன்கள் ஆகியவற்றை மீட்டெடுக்க உடனடியாக பயணிகள் 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால், அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இதுவரை பயணிகள் தவறவிட்ட செல்போன்களை கண்டுபிடிக்க ரயில்வே பாதுகாப்பு படை சைபர் கிரைம் போலீசார் நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, திருடுபோன ரூ.62.9 லட்சம் மதிப்புள்ள 205 செல்போன்களை மீட்டுள்ளனர். அதில் 8 செல்போன்கள் யாருடையது என்பது குறித்த அடையாளம் காணப்பட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது. இதில், உரியவர்களை வரவழைத்து, அவர்களிடம் திருடுபோன செல்போன் ஒப்படைக்கப்பட்டது. இதர செல்போன்களின் உரிமையாளர்களை கண்டறிந்து, அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
