மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய வாலிபர் ஆகாஷ் டெலிசன் கால் முறிவு ஏற்பட்டு மதுரை ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது உயிரிழந்தார். போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, தொடர் மறியல் ேபாராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ்கண்ணன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவரது கோரிக்கைகள் அரசு தரப்பில் ஏற்கப்பட்ட நிலையில், உடனடியாக உடற்கூராய்வு செய்யவும், அதன் அறிக்கை மற்றும் வீடியோவை மருத்துவக்கல்லூரியின் முதல்வர், ஆகாஷ் டெலிசனின் பெற்றோரிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதோடு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். தற்போது வரை தேசிய நெடுஞ்சாலை மறியல் கைவிடப்படாததால், அவ்வழியே பயணிப்போர், மாணவர்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘மறியலில் ஈடுபட்டவர்கள் இன்னும் கலைந்து செல்லவில்லை. இதனால், போக்குவரத்து பாதிக்கிறது. எனவே, அவர்களை உடனடியாக கலைந்து செல்ல அறிவுறுத்த வேண்டும்’’ என்றார். மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் ஆஜராகி, ‘‘நேற்று முன்தினம் இரவு தான் உடற்கூராய்வு முடிந்தது. நேற்று காலை சான்றிதழ் மற்றும் வீடியோ பதிவு வழங்கப்படும் என மாஜிஸ்திரேட் கூறியிருந்தார். பெற்றோர் காத்திருக்கும் நிலையில், இதுவரை சான்றிதழ் மற்றும் வீடியோ பதிவு வழங்கப்படவில்லை’’ என்றார்.
அப்போது அரசு தரப்பில், ‘‘இன்னும் 30 நிமிடங்களுக்குள்ளாக அவை வழங்கப்பட்டு விடும். தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘இன்னும் பொதுமக்களை சிரமப்படுத்தும் வகையில் ஏன் மறியல் போராட்டத்தை நடத்துகிறீர்கள்? என்றார். அப்போது மனுதாரரின் வழக்கறிஞர், ‘‘புதிய தமிழகம் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘விரைவாக உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவு வழங்கப்படும். இதனை வைத்து அரசியல் செய்வதற்கு நேரமில்லை. ஒருவேளை அது காவல் மரணமாக இருந்தால் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். மேலும், ஆகாஷின் பெற்றோர் ஊடகங்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்த உத்தரவிட்டு விசாரணையை இன்று மதியம் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.
* மானாமதுரை ஸ்டேஷனில் மாஜிஸ்திரேட், சிபிசிஐடி ஆய்வு
ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு ெதாடர்பாக மானாமதுரை காவல் நிலையத்திற்கு நேற்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி மாஜிஸ்திரேட் ஹரிஹரசுதன், சிபிசிஐடி எஸ்பி சாஜிதா, சிவகங்கை எஸ்பி சிவப்பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து ஆய்வுகளை துவக்கினர். சிபிசிஐடி எஸ்பி சாஜிதா தலைமையிலான அதிகாரிகள் ஆகாஷ் மீது பதியப்பட்ட வழக்கு விபரங்கள், கைது நடவடிக்கைகள், மேலப்பசலை பாலத்தின் கீழ் ஆகாஷ்க்கு கால்முறிவு ஏற்பட்ட இடம் உள்ளிட்ட தகவல்களை நேரடியாக ஆய்வு செய்தனர். மாஜிஸ்திரேட் ஹரிஹரசுதன், ஆகாஷிடம் விசாரணை நடத்திய எஸ்ஐக்கள் குகன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ேடாரிடம் விசாரணை நடத்தினார். சிசிடிவி காட்சிகளை தடயவியல் துறை, காவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மூலம் பேக்கப் எடுக்கப்பட்டு சீலிடப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு துவங்கிய விசாரணை மாலை 5 மணி வரை நடந்தது.
