சென்னை: நடிகர் விஜய் நேரில் ஆஜராக 15 நாள் அவகாசம் கேட்டு வக்கீல் மூலம் அனுப்பிய கடிதத்தை சிபிஐ நிராகரித்து வரும் 15ம் ேததி ெடல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவரான நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து 4 மணி நேரம் காலதாமதமாக வந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கை தற்போது, சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகர் விஜய் தேர்தல் பிரசார வாகனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகன ஓட்டுநர் பரணிதரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்டை பொதுச் செயலாளர் அதவ் அர்ஜூனா, இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி கடந்த ஜனவரி 12 மற்றும் 19ம் ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் மொத்தம் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். மேலும், கட்சியின் மாநாடு மற்றும் பொதுக்கூட்ட செலவுகளுக்கான பணம் தொடர்பான ஆவணங்கள் குறித்து பதில் அளிக்கவில்லை. இதனால் சிபிஐ அதிகாரிகள் விரைவில் கட்சி மாநாடு செலவுகளுக்கான பணம் வரவு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி இருந்தனர். ஆனால் சிபிஐ அதிகாரிகள் கேட்ட ஆவணங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக நடிகர் விஜய் தரப்பில் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து நடிகர் விஜய் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு நேற்று நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். ஆனால் தவெக தலைவர் விஜய், ‘ஏற்கனவே திட்டமிட்ட தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வு பணிகள் இருப்பதால் 15 நாட்கள் அதாவது, 2 வாரம் அவகாசம் கேட்டும், சிபிஐயின் சென்னை மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வக்கீல் மூலம் சிபிஐ அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்திற்கு, வழக்கு விசாரணையை வேண்டும் என்று காலதாமதமாக ஆக்கும் வகையில் அடிக்கடி அவகாசம் கேட்க் கூடாது என்றும், ஏற்கனவே பொங்கல் பண்டிகையின் போது நடிகர் விஜய் கேட்ட ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது.
எனவே வரும் 15ம் தேதி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்டாயமாக நடிகர் விஜய், நாங்கள் ஏற்கனவே கேட்ட வழக்கு மற்றும் மாநாடு செலவுக்கான பணம் வரவு குறித்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கே கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் 41 பேர் இறந்தது தான். எனவே சிபிஐயின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடிகர் விஜய் ஆஜராக அனுமதி அளித்தால், அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் கூட்டத்தால் மீண்டும் அசாதாரண சூழல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நடிகர் விஜய்யின் 2 வார கால அவகாசம் மற்றும் சென்னை அலுவலக கோரிக்கையை சிபிஐ நிராகரித்து, டெல்லி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் நேற்று நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதவெக தலைவர் விஜய்க்கு பின்னடைவாகவும், பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேரடியாக தவெக தங்களுடன் கூட்டணியில் சேர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு தவெக சார்பில் மறுப்பு தெரிவித்ததால், அதற்கு பழி வாங்கும் நோக்கில் பாஜ கரூர் கூட்ட நெரிசல் வழக்கை தேர்தல் நேரத்தில் கையில் எடுத்து நடிகர் விஜய்க்கு நேரடியாக நெருக்கடி கொடுத்து வருகிறது. இது தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவசர அவசரமாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தவெகவை கூட்டணிக்கு அழைத்த மாநில செய்தி தொர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்தை கட்சி பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
அவர் உத்தரவிட்ட சில மணி நேரத்தில் சிபிஐ மீண்டும் நடிகர் விஜய்க்கு வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் பாஜ நேரடியாக சிபிஐயை கையில் வைத்து நடிகர் விஜய்யை தங்களது கூட்டணியில் சேர்க்க திரைமறைவில் கடுமையான அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. சிபிஐ இந்த முறை நேரில் ஆஜராகும் போது, கட்சி தொடங்கிய பிறகு நடத்திய மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான செலவு கணக்குகள் மற்றும் அதற்கான பல கோடி ரூபாய் நிதி வருவாய் குறித்த ஆவணங்களை எடுத்து வரும்படி தெரிவித்துள்ளது.
இதனால் வரும் 15ம் தேதி நடிகர் விஜய் கட்சி செலவுக்கான கணக்கு ஆவணங்களுடன் ஆஜராவார் என்று கூறப்படுகிறது. அப்படி ஆவணங்கள் அளிக்கும் பட்சத்தில், அதற்கான கணக்கு கடந்த 2024-25 நிதி ஆண்டில் வருமான வரித்துறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்றும் சரிபார்க்கப்படும் என்றும், அப்படி இல்லாத பட்சத்தில் மாநாடுகளுக்கு செல்வு செய்த பல நூறு கோடி பணம் கணக்கில் வராத பணம் என்று கருத்தில் கொண்டு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற குற்றச்சாட்டு நடிகர் விஜய் மீது இருப்பதால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது விசாரணையை தொடங்கும் என்று டெல்லி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சிபிஐ விசாரணைக்கு பிறகு தனித்து தேர்தலில் போட்டியிட போகிறாரா அல்லது சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை என 3 அதிகார அமைப்புகள் கொடுக்கும் அழுத்தத்தை சமாளிக்க பாஜ கூட்டணியில் சேர போகிறாரா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதல் இருப்பதாக தவெக நேரடியாக குற்றம்சாட்டிள்ளது. இதனால் சிபிஐ முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக கடந்த வாரம் சம்மன் அனுப்பியது.
அந்த சம்மனை அவர் முதலில் பெற வில்லை என்று தகவல் வெளியானது. அதை தொடர்ந்து செந்தில் பாலாஜி தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘கரூர் துயர சம்பவம் தொடர்பாக, சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன… வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் வரும் 17ம் தேதி முன்னாள் அமைச்சர் ெசந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க ஒன்றிய பாஜ அரசு, பீகார் போன்று தனது தேர்தல் விளையாட்டுகளை தொடங்கி உள்ளதாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* நடிகர் விஜய் நீதிமன்றம் செல்ல முடிவு
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை ஓரிரு நாளில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி தலைவர்கள் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேநேரம் தமிழக தேர்தலில் முதன்முறைகாக தவெக களத்தில் இறங்க உள்ளது. இதனால் நடிகர் விஜய், தனது கட்சியின் வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசார பயணம் தொடர்பான பணிகளை திட்டமிட்டு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் பாஜ ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, கரூர் நெரிசல் வழக்கு விசாரணையை ஒன்றரை மாதம் கிடப்பில் போட்டிருந்த நிலையில், நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ள நிலையில், வேண்டும் என்றே, அவரது பிரசார பயண திட்டத்தை தடுக்கும் வகையில், சிபிஐ தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாக தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். தவெகவில் நடிகர் விஜய் பிரசாரம் செய்தால் மட்டுமே மக்கள் கூடுகின்றனர். தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் அவர்களுக்கு கூட்டம் சேரவில்லை.
இதனால் நடிகர் விஜய் கட்டாயம் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் சிபிஐ, தேர்தல் நேரத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி நெருக்கடி கொடுத்து வருகிறது. எனவே தவெக சார்பில், சிபிஐ அனுப்பிய சம்மனை எதிர்த்தும், அதற்கு தடை கேட்டும் நீதிமன்றம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக நடிகர் விஜய் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அக்கட்சியினர் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
