கரூர்: கரூர் தவெக கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில் தவெக நிர்வாகிகள், கலெக்டர், எஸ்பி உள்ளிட்டோர் டெல்லி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜி எம்எல்ஏ வரும் 17ம்தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சில ஊடகங்களில் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கரூர் துயர சம்பவம் குறித்து சிபிஐ தரப்பில் அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், வரும் 17ம் தேதி நேரில் ஆஜராகி, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய மற்றும் முழுமையான விளக்கங்களை அளிக்க உள்ளேன். இந்த விவகாரத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்’’ என்று கூறி உள்ளார்.
