சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரியை ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, மொரிஷியஸ் என வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பார்த்து மகிழ்ந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள லால்பேட்டை பகுதியில் துவங்கி சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடி பகுதி வரை பரந்து விரிந்துள்ள தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான, சோழர்களால் வெட்டப்பட்ட வீராநாராயண பெருமாள் ஏரி என அழைக்கப்படும் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கீழஅணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தற்போது வீராணம் ஏரியும் தண்ணீர் சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏரியின் தற்போதைய நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 47.5 கன அடியை எட்டி உள்ளது.
கடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டு பாசனத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், முஷ்ணம், சிதம்பரம் மற்றும் புவனகிரி வட்டங்களில் உள்ள 102 கிராமங்களில் 44,856 ஏக்கர் பாசன பரப்புகள் பயனடைந்து வருகிறது. இதனை பார்வையிட குறிப்பாக ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, மொரிஷியஸ் உள்ளிட்ட வெளிநாட்டில் வாழும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வேர்களைத் தேடி அமைப்பின் சார்பில் வீராணம் ஏரியை பார்வையிட்டனர். இதில் வீராணம் ஏரி உருவான வரலாறு, ஏரியின் பாசன வசதி, ஏரியின் சுற்றளவு உள்ளிட்ட பல விவரங்களை கேட்டு அறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டனர். இவர்கள் வீராணம் ஏரியில் கடல் போல காட்சியளிக்கும் கந்தகுமாரன் பகுதியில் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியின்போது, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் சிவக்குமார், லால்பேட்டை வீராணம் ஏரி பாசன பிரிவு இளம் பொறியாளர் சிவராஜ், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன பிரிவு இளம்பொறியாளர் படைகாத்தான் உள்ளிட்டோர் வீராணம் ஏரி சிறப்பை பற்றி விளக்கிக் கூறினர். அப்போது பொதுப்பணித்துறை ஊழியர்கள் பலரும் உடனிருந்தனர்.
The post ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, மொரிஷியசில் இருந்து வருகை; வீராணம் ஏரியை பார்வையிட்டு மகிழ்ந்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள்: வரலாற்றை அதிகாரிகள் விளக்கினர் appeared first on Dinakaran.