கூடுவாஞ்சேரி: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் தொடங்கி கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் இணையும் மாநில ஊரக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான கண்டிகை-கல்வாய் சாலை 10 கிலோ மீட்டர் கொண்டது. இந்த சாலையில் கண்டிகை, மேலைக்கோட்டையூர், ராஜீவ் காந்தி நகர், மல்ரோசாபுரம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், முருகமங்கலம், மேட்டுப்பாளையம், அம்மணம்பாக்கம், குமிழி, ஒத்திவாக்கம், கல்வாய் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கண்டிகை-கல்வாய் சாலை ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி உள்ளது. இதனை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கண்டிகை-கல்வாய் சாலையில் அரசுக்கு சொந்தமாக பல ஏக்கர் கணக்கில் புறம்போக்கு நிலம் உள்ளதால் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டி வருகின்றனர்.
இதில் 40 அடியாக இருந்த சாலை தற்போது 18 அடி கூட இல்லை. இதில் ஓட்டல், ஹார்டுவேர்ஸ், மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை மணி கணக்கில் நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிய பின் எடுத்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் குறித்த நேரத்திற்கு சென்றுவர முடியாமல் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், அன்றாடம் வேலைக்கு சென்று வருவார் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவசர ஆபத்துக்கு கூட 108 ஆம்புலன்ஸ் சொல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே, மேற்படி சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post கண்டிகை-கல்வாய் சாலையில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு appeared first on Dinakaran.