தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த ஏரி: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை

 

ஸ்ரீபெரும்புதூர்: செரப்பணஞ்சேரி ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து காணப்படும் ஏரியினை, தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 350 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த, ஏரி மூலம் அதே பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.

அப்பகுதி விவசாய மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்; வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள செரப்பணஞ்சேரி ஏரி நீர் பிடிப்பு பகுதியில், ஒரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகள் மற்றும் கோழி, ஆடு இறைச்சி கழிவுகளை கொட்டப்பட்டு வருகிறது.

மேலும் வைப்பூர் ஊராட்சி, காரணித்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் நேரடியாக, ஏரியில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனல், ஏரி நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. மேலும் ஏரி, நீரின் நிறம் மாறி மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அங்கு விவசாயம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கழிவுகளால் மாசடைந்து காணப்படும் ஏரியினை தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த ஏரி: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: