கட் அவுட், பால் அபிஷேகம் செய்தே கடனாளியானதால் ரஜினிகாந்த் ரசிகர் தற்கொலை: பல்லாவரம் அருகே சோகம்

குன்றத்தூர்: அனகாபுத்தூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரகு (54), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி சித்ரா (45) என்ற மனைவி உள்ளார். சிறு வயதில் இருந்தே நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான ரகு, தனது பெயரைக்கூட ரஜினி ரகு என்று மாற்றிக்கொண்டார். அதே பகுதியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்திலும் இணைந்து செயல்பட்டார். மேலும், கண்ணில் கண்ட ரஜினி புகைப்படங்களை எல்லாம் சேகரித்து, தனது வீட்டில் வைத்திருந்தார். ரஜினியின் ஒரு படம் விடாமல் அனைத்தையும் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, முதல் ஷோ பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அத்துடன் அவரது படம் ரிலீஸ் ஆகும் தேதியில், பெரிய அளவில் கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். கையில் பணம் இல்லாவிட்டாலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி, கட் அவுட் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள், கடனை திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்யவே, செய்வதறியாவது தவித்த ரகு, அந்த கடனை அடைப்பதற்காக பிரபல தனியார் வங்கியில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர், கடன் கொடுத்த தனியார் வங்கியும் ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்தது.

மேலும், இவர் ஓட்டி வந்த ஆட்டோ தொழிலும் சரியாக செல்லாததால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமலும், ஆட்டோவுக்கு மாத தவணை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த சில தினங்களாக ரகு மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று காலை, இவரது மனைவி வேலைக்கு சென்று, மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது, கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ள சென்று பார்த்தபோது, அங்கு ரகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதை பார்த்து, சித்ரா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், ரகு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட் அவுட், பால் அபிஷேகம் செய்தே கடனாளியானதால் ரஜினிகாந்த் ரசிகர் தற்கொலை: பல்லாவரம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: