புதுச்சேரி, குமரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்


புதுச்சேரி: புதுச்சேரி, குமரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா நகரமான புதுச்சேரியில் நேற்றிரவு ஏராளமானோர் திரண்டனர். இதையொட்டி அங்குள்ள நகரம் மற்றும் எல்லை பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், பீச் ரிசார்ட்களில் அறைகள் முன்பே நிரம்பியது. பழைய சாராய ஆலையில் இருந்து டூப்ளக்ஸ் சிலை வரையிலும் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இரவு ஆக, ஆக கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடற்கரை சாலையே திணறியது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மக்கள், `ஹேப்பி நியூ இயர்’ கூறி 2025 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். 12.30 மணி வரையிலும் புத்தாண்டு கொண்டாட போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதன்பிறகு அனைவரையும் போலீசார் அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இசைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி நேற்று இரவு நடத்தவில்லை. அதேநேரம், பாண்டி மெரினா, பீச் ரிசார்ட் ஓட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் தனியார் மூலம் அளவற்ற மது, அசைவ உணவுடன் கூடிய இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் நள்ளிரவு 1 மணி வரை மதுபானம் விற்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. கடற்கரை மற்றும் நகரப் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500 தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், கேக் வெட்டியும் புதிய ஆண்டை இன்முகத்துடன் வரவேற்றனர். இளம்பெண்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சிறுவர், சிறுமிகளும் உற்சாகத்துடன் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறினர். இதனால் கடற்கரை சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும், ஏராளமான வெளி மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்திருந்ததால் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் அறைகள் நிரம்பி வழிந்தது. அதே நேரத்தில் ஆண்டின் முதல் நாளில் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் விரும்புவர். இதனால் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திரிவேணி சங்கம கடற்கரையில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதற்கிடையே இன்று அதிகாலை முதலே குமரியில் மேகமூட்டமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியது. காலையில் துயில் எழும்பிய வேண்டிய ஆதவன் வரவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு தான் சூரியன் உதயமானது.

அதற்கு பிறகே ஏராளமானோர் செல்போனில் படம் எடுத்தனர். மேலும் உற்சாகத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் கடலில் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் குளித்து மகிழ்ந்தனர். சபரிமலைக்கு மாலையிட்டு வந்த ஐயப்ப பக்தர்களும் கடலில் புனிதநீராடி பகவதி அம்மன் கோயில் மற்றும் குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றிபார்த்தனர். நீலகிரி: புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், லாட்ஜ் மற்றும் ரிசார்ட்டுக்கள் நிரம்பி வழிகின்றன. நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம் போன்ற பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

இரவு பல்வேறு ஓட்டல்கள், ரிசார்ட்டுகுள் மற்றும் காட்டேஜ்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு ெகாண்டாட்டங்களில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் நள்ளிரவு 12 மணிக்கு வீடுகளில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் நடந்தது. முன்னதாக 2024ம் ஆண்டிற்கு நன்றி செலுத்தி வழியனுப்பும் வகையில் இரவு 10.45 முதல் 11.45 மணி வரை மறையுரை நடந்தது. பின், 2025ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு 10க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. சரியாக 12 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் குத்து விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூயஇருதய ஆண்டவர் பேராலயத்தில் ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில் உலக அமைதிக்காவும், உலக மக்கள் நலன் பெறவும், கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவர்கள் இந்த திருப்பலியில் பங்கேற்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

The post புதுச்சேரி, குமரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: