பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகளை சேமித்து வைப்பதற்கு வசதியாக குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் பெரிய சந்தையான பொள்ளாச்சி சந்தைகளான காந்தி தினசரி மார்க்கெட், திரு.வி.க.மார்க்கெட்,தேர்நிலை மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் ஊட்டி,மேட்டுபாளையம்,திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பல்வேறு காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதற்காக,பாலக்காடு ரோடு அருகே நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை செயல்படுகிறது.
இந்த சந்தை தினமும் அதிகாலை 5 மணிமுதல் சுமார் 11 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இந்த உழவர் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரப்படும் காய்கறிகள்,அதன் வரத்தை பொறுத்து விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் சில சமயங்களில் தக்காளி,வெண்டை,பச்சைமிளகாய்,பூசணி,கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகமாக இருக்கும் போது விலை குறைவாக கிடைக்கும் என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் சந்தைக்கு படையெடுப்பது வழக்கம். சில நேரத்தில் தக்காளி விலை மிகவும் வீழ்ச்சியடையும் போது, விலை கட்டுப்படியாகாமல் இருப்பதால், அதனை விவசாயிகள் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
இப்படி தக்காளி மட்டுமின்றி பூசணி உள்ளிட்ட பல காய்கறிகள் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் உண்டாவது தொடர்கிறது.இதைத்தொடர்ந்து உழவர் சந்தையில்,காய்கறிகளை சேமித்து வைப்பதற்காக குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இங்கு அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளது.
கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர்,ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல இடங்களில் செல்படும் உழவர் சந்தையில், விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு உள்ளது.
ஆனால், விவசாய பகுதி நிறைந்த பொள்ளாச்சியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் குளிர் பதன கிடங்கு இல்லாமல் இருப்பது,பெரும் குறையாக உள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.வரும் காலங்களிலாவது, உழவர் சந்தையில் குளிர்பதன கிடங்கு விரைந்து அமைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post காய்கறிகளை சேமித்து வைக்க வசதியாக உழவர் சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.