தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்திற்கு பெரும் வரவேற்பு : வெறும் 20 நாட்களில் சுமார் 10,000 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

சென்னை : ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற வெறும் 20 நாட்களில் சுமார் 10,000 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கைவினை கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்திட கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டத்தை கடந்த டிசம்பர் 10ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும். அத்துடன் ரூ. 50,000 வரை மானியமும் 5% வட்டி மானியமும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

திட்டம் அறிவிக்கப்பட்டு 20 நாட்களில் 8,862 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. விண்ணப்பிப்போரை தேர்வு செய்வதற்கு பணிக்குழு உருவாக்கப்பட்டு அந்த குழு பயனாளிகளை தேர்வு செய்து வருகிறது. மறுபுறத்தில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்து இருக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் என்று தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.

தச்சர்கள், குயவர்கள், காலனி தயாரிக்கும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்களின் குழந்தைகள் அதே தொழிலை தொடர்வதற்கே கடன் உதவி வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இது ஜாதிய பாகுபாட்டை நிலை நிறுத்துவதற்கான முயற்சி என்று கூறிவரும் தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக கலைஞர் கைவினை திட்டத்தை அறிமுகம் செய்தது. குடும்பத் தொழிலை அடிப்படையாக வைக்கலாமல் 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களுக்கு கடன் உதவி வழங்குவதால் இதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

The post தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்திற்கு பெரும் வரவேற்பு : வெறும் 20 நாட்களில் சுமார் 10,000 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! appeared first on Dinakaran.

Related Stories: