திருப்பூர் : திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. ரூ.30.06 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயர் சூட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 53 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள், 22 கடைகள், 2 உணவகங்கள், ஒரு தாய்மார் பாலூட்டும் அறை, 2 பராமரிப்பு அறை உள்ளிட்ட வசதிகள் செயல்பட்டு வருகிறது.
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் இங்கு இயக்கப்படுவதால் இங்கு பொதுமக்களின் வருகை வார நாட்களில் குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக ஏராளமான கடைகள் வாடகைக்கு எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மதுபான கடைகளில் மது அருந்தும் மது பிரியர்கள் மற்றும் யாசகம் பெறுவோர் என ஏராளமானோர் பேருந்து நிலைய வளாகத்திலேயே தங்கி விடுகின்றனர்.
இதனால் இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது இவர்களோடு திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் நபர்களும் தங்கி விடுவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே காவல்துறையினர் இரவு நேரங்களில் பேருந்து நிலைய வளாகத்தில் ரோந்து மேற்கொண்டு தங்கி இருப்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். யாசகம் பெறுவோராக இருந்தால் அவர்களை மீட்டு இரவுநேர தங்கும் விடுதிகளில் தங்க வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
The post புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தங்கும் மது பிரியர்கள் appeared first on Dinakaran.