தேவதானப்பட்டி அருகே கண்மாய் உபரி நீருக்கு புதிய வழித்தடம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டிக்கு அடுத்து அ.வாடிப்பட்டி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து வடக்கு பக்கம் பெரும்பாலான இடங்கள் மானாவாரி நிலங்களாக உள்ளது. அ.வாடிப்பட்டி, வேலாயுதபுரம், அ.புதூர், ஐந்து ஏக்கர் காலனி, ஆகிய இடங்கள் உள்ளன.

இந்த பகுதியில் பருவமழையை நம்பி ஆங்காங்கே சிறு சிறு குளங்கள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரினால் இந்த குளங்கள், தடுப்பணைகள் நிரம்புகின்றன. அவற்றை வைத்து ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மானாவாரி நிலங்களை, செழுமையாக்க வேண்டும் என்றால், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து வடக்கு பக்கம் வண்ணான் கரட்டை ஒட்டியே புதிய வாய்க்கால் வழித்தடம் அமைக்க வேண்டும். இந்த வாய்க்கால் அ.வாடிப்பட்டி வரை கொண்டு செல்ல வேண்டும். இந்த வாய்க்காலில் இருந்து ஆங்காங்கே துணை வாய்க்கால்கள் அமைக்கவேண்டும். சிறு சிறு குளங்களுக்கு நீர்வழித்தடம் அமைக்கவேண்டும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது.

இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து பருவமழை காலங்களில் பல ஆயிரம் கன அடி நீர் நம் கண் முன்னே வீணாக செல்கிறது. பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் தரிசு நிலங்கள் இருப்பது இயற்கை ஆகும். ஆனால் நமது மாவட்டத்தில் செழுமையான இடங்களில் இப்படி ஒரு வறட்சி பகுதி என்பது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து பருவமழை காலங்களில் மட்டும் வீணாக செல்லும் உபரி நீரை மட்டும் இந்த வழித்தடத்தில் திருப்பினால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும். இந்த உபரி நீரால் பல ஆயிரம் விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரம் உயரும்.

தற்போது இந்த அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு செய்து பெரும்பாலும் நிறைவேற்றி வருகிறது. அதேபோன்று இந்த கோரிக்கையையும் நிறைவேற்றினால் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்பட்டு வாழ்க்கை தரம் உயரும். ஆகையால் அதிகாரிகள் கள ஆய்வு செய்து ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து அ.வாடிப்பட்டி பகுதிக்கு புதிய நீர் வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post தேவதானப்பட்டி அருகே கண்மாய் உபரி நீருக்கு புதிய வழித்தடம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: