* மேலும் 3 பெண்கள் பாலியல் புகார், செல்போனை கைப்பற்றி விசாரணை
ஆலந்தூர்: தனது ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல் (42). இவர், நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளராக உள்ளார். மேலும், கிண்டி மடுவின்கரை நரசிங்கபுரம் பிரதான சாலையில் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில், சேலையூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் கடந்த 6 மாதங்களாக வேலை செய்துள்ளார்.
இந்த நிலையில், அந்த இளம்பெண் தனது குடும்ப தேவைக்காக சக்திவேலிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதன் மூலம் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொண்ட சக்திவேல், அந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்த காரணத்தால் மிரட்டல் விடுத்ததுடன், தான் கடனாக கொடுத்த ரூ.2 லட்சத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண், கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், மகளிர் போலீசார், சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணை மிரட்டியது தெரியவந்ததால் அவரை கைது செய்து, நேற்று முன்தினம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர், தனது நிறுவனத்தில் பணியாற்றும் வேறு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாரா என, போலீசார் விசாரணை நடத்தியபோது, அதே நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் 3 இளம்பெண்கள் சக்திவேல் மீது பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளனர். இதனால், சக்திவேலின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘‘நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெயர் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாது’ என்றனர்.
The post தனது ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி கைது appeared first on Dinakaran.