மாதவரத்தில் ரூ.17 கோடி மதிப்பு மெத்தாம்பெட்டமின் பறிமுதல்: போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி உள்பட 8 பேர் அதிரடி கைது

திருவொற்றியூர் ஜன.1: மாதவரத்தில் ஏ.என்.ஐ.யூ. பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.17 கோடி மதிப்புள்ள 17 கிலோ மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாதவரம், ரோஜா நகரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்படி, புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஏ.என்.ஐ.யூ பிரிவு போலீசார், மாதவரம் காவல் சரக காவல் அதிகாரிகளுடன் இணைந்து தனிப்படை அமைத்து கடந்த 21ம் தேதி மாதவரம் ரோஜா நகரில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெங்கடேசன் (41), அவரது கூட்டாளி திருவல்லிக்கேணி பார்டர் தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (36) 1.5 கிலோ கிராம் மெத்தா பெட்டமின் போதைப்பொருள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்ற வெங்கடேசன் பிரபல போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரியாவார், இது சம்பந்தமான வழக்கில் பஞ்சாபில் கைது செய்யப்பட்டு 10 வருடம் பட்டியாலா சிறையில் இருந்தவர், ஏழு வருடம் சிறை தண்டனை முடிந்து கடந்த 2021ம் ஆண்டு வெளியே வந்தவர்.

இந்திய- பர்மா (மியான்மர்) நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதும், மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளை பல மாநிலங்கள் வழியாக இடைத்தரகர்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து நட்சத்திர விடுதிகளில் நடக்கும் பார்ட்டிகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களிடம் விற்பனை செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவருக்கு பின்னால் இருந்த மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தல் கும்பலை முழுவதுமாக பிடிக்க காவல்துறை திட்டமிட்டது. இதை தொடர்ந்து, சிறையில் இருந்த வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளி கார்த்திக் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். வெங்கடேசனின் செல்போனில் தொடர்பு கொண்ட எண்களை வைத்து அவர்களிடம் செய்த விசாரணையில் இவருடன் தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை, அரியானா, மணிப்பூர் போன்ற இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பிரபலமான பல போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பில் இருந்ததும் போதைப்பொருட்கள் அனைத்தும் மலேசியாவில் இருந்து கடத்தி வருவதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரநாயர் உத்தரவின் பேரில், மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், புழல் சரக உதவி ஆணையர் சகாதேவன் ஆகியோருடன், சி.எம்.பி.டி. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் 3 தனிப்படை குழுவினர் வெங்கடேசன், கார்த்திக் ஆகிய இருவரும் கொடுத்த முக்கிய தகவல்களின் அடிப்படையில் வெங்கடேசனின் மனைவி ஜாவச மெரிடா, இவரது உறவினர்கள் வடகரை புள்ளி லைன் பகுதியை சேர்ந்த சரத்குமார், கொடுங்கையூர் சேர்ந்த பிரபு, ஊரப்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் மற்றும் இவரது கூட்டாளிகள் சாகுல் அமித், லாரன்ஸ், மதுரை அருப்பு கோட்டையைச் சேர்ந்த முருகன், லட்சுமி நரசிம்மன் உள்பட 8 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வடகரை பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 16 கிலோ மெத்தாம்பெட்டமின் போதைப் பொருளையும் போலீசார் பறிமுதல் செய்து அம்பத்தூர் அருகே உள்ள நொளம்பூர் மல்லேக்கர் பகுதியில் உள்ள போதைப்பொருள் ஆய்வு மையத்தில் ஒப்படைத்தனர். இதில் முருகன், லட்சுமிநரசிம்மன் ஆகிய இருவரும் லேப்டாப் டெக்னீசியன்கள், மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளை சரியான அளவில் கலவை செய்து சக கூட்டாளிகளுக்கு கொடுப்பவர்கள் என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமார் 17 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு கார், ஒரு பைக் பறிமுதல் பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்து சம்பாதித்த சுமார் 5 கோடி மதிப்பிலான வீடுகளின் ஆவணங்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க அருப்புக்கோட்டை மற்றும் டெல்லிக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

அவர்கள் பிடிபட்டால் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.  போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் கும்பலை முற்றிலுமாக பிடிக்க சென்னை மாநகர ஆணையர் உத்தரவின் பேரில் ஏ.என்.ஐ.யூ போலீசார் தீவிரம் காட்டி வருவதால் இந்த வேட்டை தொடரும், விசாரணை பட்டியலில் உள்ள பலர் கைது செய்யப்படலாம் எனவும் தமிழகத்திலேயே முதன்முறையாக மாதவரத்தில் தான் அதிகப்படியான மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

The post மாதவரத்தில் ரூ.17 கோடி மதிப்பு மெத்தாம்பெட்டமின் பறிமுதல்: போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி உள்பட 8 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: