திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி தீபமலை மீது காட்சிதரும் மகா தீபம் நேற்றுடன் நிறைவு

* இன்று கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது
* ஆருத்ரா விழாவில் தீப மை வழங்கப்படும்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மலை மீது கடந்த 6ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம், நேற்றுடன் நிறைவு பெற்றது அதைத்தொடர்ந்து, இன்று மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்படும்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக, கடந்த 13ம் தேதி மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

ஆண்டுதோறும் மலைமீது ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது மரபு. அதன்படி, தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதற்காக, அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் தினமும் மலைக்கு சென்று மகா தீபத்தை ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

மேலும், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் மலை உச்சிக்கு நெய் மற்றும் திரி ஆகியவை அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 11வது நாளாக மகா தீபம் மலையில் காட்சியளித்தது. கனமழை மற்றும் தொடர்ந்து வீசும் பலத்த காற்றிலும் மலை மீது மகா தீபம் தொடர்ந்து காட்சியளித்தது.

மேலும், மலையில் மகா தீபம் காட்சியளிக்கும் நாட்களில் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் விரும்புகின்றனர். எனவே, கடந்த 11 நாட்களாக திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் மலைமீது 11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம் நேற்று இரவுடன் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை மலையில் இருந்து மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் கொப்பரை வைக்கப்பட்டு இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வரும் ஆருத்ரா தரிசனத்தின் போது மகா தீபக் கொப்பரையிலிருந்து பெறப்படும் தீபமை நடராஜருக்கு அணிவிக்கப்பட்டு, அதன் பிறகு பக்தர்களுக்கு தீபச்சுடர் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி தீபமலை மீது காட்சிதரும் மகா தீபம் நேற்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: