திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி மகா ரதம் மாடவீதியில் பவனி வந்தது. காலை தொடங்கி நள்ளிரவு வரை நடந்த பஞ்ச ரதங்கள் பவனியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித் தரும் திருத்தலமாகவும் திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுேதாறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளிய திருநாளை கொண்டாடும் வகையில், ெதாடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவில் 6ம் நாளன்று வெள்ளித் தேேராட்டமும், 7ம் நாளன்று மரத்தேர் எனப்படும் மகா ரதம் பவனியும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தீபத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று ேதரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் நேற்று காலை 6 மணியளவில் அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, சங்கொலி முழங்க, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, தேரடி வீதியில் அலங்கரித்து நிலை நிறுத்தியிருந்த பஞ்ச ரதங்களில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீபத்திருவிழா தேரோட்டத்தின் தொடக்கமாக, சிறப்பு பூஜைகளுடன் விநாயகர் தேர் புறப்பாடு காலை 6.36 மணிக்கு நடந்தது. மாடவீதியை வலம் வந்த விநாயகர் தேர், காலை 9.07 மணியளவில் நிலையை அடைந்தது. மேலும், காலை 8.36 மணியளவில் சுப்பிரமணியர் தேர் புறப்பாடு நடந்தது. அதில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அலங்கார ரூபத்தில் அருள்பாலித்தார். மாடவீதியில் வலம் வந்த சுப்பிரமணியர் தேர் பகல் 12.10 மணிக்கு நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து, பெரிய தேர் என பக்தர்களால் அழைக்கப்படும் ‘மகா ரதம்’ பகல் 12.58 மணியளவில் பவனி தொடங்கியது. அப்போது, தேரடி வீதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்திப் பெருக்குடன் விண்ணதிர முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
விழாவில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர், மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், டிஆர்ஓ ராமபிரதீபன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் ஜோதி, மேயர் நிர்மலா வேல்மாறன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், அறங்காவலர்கள் ராஜாராம், மீனாட்சிசுந்தரம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். மாடவீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்தாடியபடி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி அருள்பாலித்த மகா ரதம் பவனி வந்தது. அப்போது, மேளதாளம் முழங்க, மங்கள இசை ஒலிக்க, தூப தீபாராதனையுடன் மாடவீதியில் பவனி வந்த மகா ரதத்தின் மீது பக்தர்கள் மலர்களை தூவி வணங்கினர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் ₹75 லட்சம் மதிப்பில் மகா ரதம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த ஆண்டு மகா ரதம், எந்த இடத்திலும் தங்கு தடையின்றி மாடவீதியில் பவனி வந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் மாடவீதியில் பவனி வந்த மகா ரதம், இரவு 8.30 மணியளவில் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து, அம்மன் தேர் பவனி புறப்பாடு நடந்தது. அலங்கார ரூபத்தில் தேரில் பவனி வந்து பராசக்தி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் ேதர் திருவிழா வழக்கப்படி, பெண்கள் மட்டுமே அம்மன் தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. நேற்று காலை 6.36 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்த தேரோட்டத்தை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர். அதனால், மாடவீதி மட்டுமின்றி, நகரின் எல்லா திசைகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் விழாக்கோலமாக காட்சியளித்தது. மேலும், தேரோட்டத்தின்போது மருத்துவக்குழுவினருடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், மீட்புக்குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், அதிநவீன சுழல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு போலீஸ் வாகனம் ஆகியவை தேர்களை பின்தொடர்ந்து சென்றன. தேரோட்டம் நடைபெற்ற மாடவீதி முழுவதும் 250க்கும் மேற்பட்ட மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர். வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்தாடியபடி, வந்த மகா ரதம் பவனி * காலை தொடங்கி இரவு வரை விழாக்கோலம் * லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா appeared first on Dinakaran.